மூன்றாம் திருமொழி


668 மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ்
வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே .
1

 

669 நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே .
2

 

670 மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே .
3

 

671 உண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே .
4

 

672 தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே .
5

 

673 எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
தம்பி ரானம ரர்க்கு,அரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே .
6

 

674 எத்தி றத்திலும் யாரொடும் கூடும்,அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே .
7

 

675 பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே .
8

 

676 அங்கை யாழி யரங்க னடியிணை
தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே .
9