பெரியாழ்வார் திருமொழி 1:7


1:7 பெரியாழ்வார் திருமொழி – மாணிக்கம் கட்டி
(கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்)

44:
மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ. (2) 1.

45:
உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய். அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே. தாலேலோ. 2.

46:
என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
தாமரைக்கண்ணனே. தாலேலோ. 3.

47:
சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே. தாலேலோ
தேவகிசிங்கமே. தாலேலோ. 4.

48:
எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
தூமணிவண்ணனே. தாலேலோ. 5.

49:
ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய். தாலேலோ
சுந்தரத்தோளனே. தாலேலோ. 6.

50:
கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே. அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. 7.

51:
கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய். தாலேலோ
நாராயணா. அழேல்தாலேலோ. 8.

52:
மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா. அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே. தாலேலோ. 9.

53:
வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2) 10.