பெரியாழ்வார் திருமொழி 2:10


2:10 பெரியாழ்வார் திருமொழி  – ஆற்றிலிருந்து
(ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்)

213: 
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை 
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு 
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு 
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும் 
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2) 1. 

214: 
குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ 
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த 
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு 
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும் 
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும். 2. 

215: 
தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி 
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து 
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு 
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும் 
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். 3. 

216: 
தேனுகனாவி செகுத்து பனங்கனி 
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால் 
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து 
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும் 
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும். 4. 

217: 
ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு 
பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு 
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு 
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும் 
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும். 5. 

218: 
தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய் 
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி 
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர் 
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும் 
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். 6. 

219: 
மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று 
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை 
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே 
தாவடியிட்டானால்இன்றுமுற்றும் 
தரணியளந்தானால்இன்றுமுற்றும். 7. 

220: 
தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய் 
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண் 
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய் 
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும் 
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும். 8. 

221: 
வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும் 
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி 
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை 
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும் 
தரணியிடந்தானால்இன்றுமுற்றும். 9. 

222: 
அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு 
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட 
அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல் 
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2) 10.