பெரியாழ்வார் திருமொழி 3:9


3:9 பெரியாழ்வார் திருமொழி – என்னாதன்
(க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை
இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்)

307:
என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன் நாதன்காணவே தண்பூமரத்தினை
வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட
என்னாதன்வன்மையைப்பாடிப்பற
எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. (2) 1.

308:
என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி
முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான்
தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற
தாசரதிதன்மையைப்படிப்பற. 2.

309:
உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து
செருக்குற்றான் வீரம்சிதைய தலையைச்
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற
தேவகிசிங்கத்தைப்பாடிப்பற. 3.

310:
மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான். என்றுஅழ
கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற
சீதைமணாளனைப்பாடிப்பற. 4.

311:
பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற
அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. 5.

312:
முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த
படியில்குணத்துப் பரதநம்பிக்கு அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற
அயோத்தியர்கோமானைப்பாடிப்பற. 6.

313:
காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற
தூமணிவண்ணனைப்பாடிப்பற. 7.

314:
தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடைச்
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற
அயோத்திக்கரசனைப்பாடிப்பற. 8.

315:
மாயச்சகடமுதைத்து மருதிறுத்து
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற
ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற. 9.

316:
காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்
நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற
அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற. 10.

317:
நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்
செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல்
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. (2) 11.