மதுரகவி ஆழ்வார்


மதுரகவி ஆழ்வார்

பிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம்
நட்சத்திரம் : சித்திரை சித்திரை, (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி
பாடல்கள் : 96
சிறப்பு : நம்மாழ்வாரைப் புகழ்ந்தவர். 

கருடாழ்வாரின் அம்சமாக திருக்கோளூர் என்ற திவ்யதேசத்தில் அவதரித்தவர் மதுரகவி ஆழ்வார். செவிக்கு இனிமையாக செஞ்சொற்களால் கவிதை பாடும் வல்லவர் ஆதலால் இவர் மதுரகவி ஆழ்வார் என புகழப்பட்டார். ஒருமுறை இவர் அயோத்தியில் உள்ள ராமபிரானை வணங்கிவிட்டு அங்கேயே சிலகாலம் தங்கினார். ஒருநாள் தான் பிறந்த திருக்கோளூர் பெருமானை தென்திசை நோக்கி வணங்கும்போது வானத்தில் ஒரு ஜோதி தெரிவதைக் கண்டார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களும் அந்தத் தென்திசை நோக்கிப் புறப்பட்டார். ஆழ்வார் திருநகரி வந்தவுடன் அந்த ஜோதியைக் காணாத ஆழ்வார், அந்த ஊர் மக்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன எனக் கேட்டார். ஊர் மக்களும், அந்த ஊர் புளிய மரத்தினுள் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி கூறினார்கள்.
நம்மாழ்வாரின் முன் சென்ற மதுரகவி ஆழ்வார், நம்மாழ்வாருக்கு காது கேட்குமா என அறிய ஒரு குண்டுக்கல்லை தூக்கிப்போட்டார். அந்த சத்தத்தால்  நம்மாழ்வார் கண் விழித்தார். இவர் நம்மிடம் பேசுவாரா என்பதை அறிய செத்த பின் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் ? (உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து எதனைஅனுபவித்து எங்கே இருக்கும் ?) எனக் கேட்டார். அதற்கு, பிறந்தது முதல் பெற்றவர்களிடம்கூட பேசாத நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்று பதில் உரைத்தார். மதுரகவி ஆழ்வார், தன்னை ஆட்கொள்ளுமாறு நம்மாழ்வாரிடம் வேண்ட அவரும் நம் பிரபந்தங்களை ஓலைப்படுத்தும்படி ஆணையிட்டார். நம்மாழ்வார் காலத்துக்குப் பின் அவரது விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளச் செய்தார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவர்கள் நம்மாழ்வாரை வாதத்திற்கு அழைத்தனர். அவர் இல்லாததால்  மதுரகவி ஆழ்வார், முன்னூறு சங்கப்புலவர்கள் ஏறிய சங்கப்பலகையில் நம்மாழ்வார், பாடிய ஓலையை வைத்தவுடன் பலகை கவிழ்ந்தது. அனைத்துப்புலவர்களும் பொற்றாமரைக்குளத்துக்குள் விழுந்துவிட்டனர். நம்மாழ்வார் பகவானின் அம்சம் என்பதை சங்கப்புலவர்கள் உணர்ந்தனர். மதுரகவி, ஆழ்வார் தம் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும் பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி உயர்வுற்றார்.
பெருமாளின் 108 திருப்பதிகளில் மதுரகவி ஆழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஒரு கோயிலை மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். அந்தக்கோயிலிலும் பெருமானைக் கூடபாடாத மதுரகவி ஆழ்வார் தன் குருவான நம்மாழ்வாரைப் போற்றி கண்ணிநுன் சிறுத்தாம்பு என்ற திவ்ய பிரபந்தத்தை பாடினார்.