பெரியாழ்வார் திருமொழி -இரண்டாம் பத்து


பெரியாழ்வார் திருமொழி இரண்டாம்பத்து

 

முதல்திருமொழி

மெச்சூதுசங்கம் இடத்தான்* நல்வேயூதி*

பொய்ச்சூதில் தோற்ற* பொறையுடை மன்னர்க்காய்*

பத்தூர் பெறாது அன்று* பாரதம் கைசெய்த*

அத்தூதன் அப்பூச்சிகாட்டுகின்றான்* அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான். (2) 2.1.1.

 

மலைபுரை தோள் மன்னவரும்* மா ரதரும் மற்றும்*

பலர்குலைய* நூற்றுவரும் பட்டழிய*

பார்த்தன் சிலைவளையத்* திண்தேர் மேல் முன்னின்ற*

செங்கண் அலைவலை வந்து அப்பூச்சிகாட்டுகின்றான்* அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.

 

காயும்நீர் புக்குக்* கடம்பேறி*

காளியன் தீயபணத்தில்* சிலம்பார்க்கப் பாய்ந்தாடி*

வேயின் குழலூதி* வித்தகனாய் நின்ற*

ஆயன்வந்து அப்பூச்சிகாட்டுகின்றான்* அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.  2.1.3.

 

இருட்டில் பிறந்துபோய்* ஏழை வல்லாயர்*

மருட்டைத் தவிர்ப்பித்து* வன் கஞ்சன் மாளப்*

புரட்டி அந்நாள் எங்கள்* பூம்பட்டுக் கொண்ட*

அரட்டன் வந்து அப்பூச்சிகாட்டுகின்றான்* அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான். 2.1.4.

 

சேப்பூண்ட* சாடு சிதறி*

திருடி நெய்க்கு ஆப்பூண்டு* நந்தன்மனைவி கடைதாம்பால்*

சோப்பூண்டு துள்ளித்* துடிக்க துடிக்க *

அன்று ஆப்பூண்டான் அப்பூச்சிகாட்டுகின்றான்* அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான். 2.1.5.

 

செப்பிள மென்முலைத்* தேவகி நங்கைக்கு*

சொப்படத் தோன்றித்* தொறுப்பாடியோம் வைத்த*

துப்பமும் பாலும்* தயிரும் விழுங்கிய*

அப்பன்வந்து அப்பூச்சிகாட்டுகின்றான்* அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.   2.1.6.

 

தத்துக்கொண்டாள்கொலோ?* தானேபெற்றாள்கொலோ?*

சித்தமனையாள்* அசோதை இளஞ்சிங்கம்*

கொத்தார் கருங்குழல்* கோபால கோளரி*

அத்தன்வந்து அப்பூச்சிகாட்டுகின்றான்* அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.   2.1.7.

 

கொங்கைவன்* கூனி சொற்கொண்டு*

குவலயத் துங்கக் கரியும்* பரியும் இராச்சியமும்*

எங்கும் பரதற்கு அருளி* வன்கானடை*

அங்கண்ணன் அப்பூச்சிகாட்டுகின்றான்* அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.   2.1.8.

 

பதக முதலை* வாய்ப் பட்டகளிறு*

கதறிக்கைகூப்பி* என்கண்ணா! கண்ணா! என்ன*

உதவப் புள்ðர்ந்து* அங்கு உறுதுயர் தீர்த்த*

அதகன் வந்து அப்பூச்சிகாட்டுகின்றான்* அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.  2.1.9.

 

வல்லாளி இலங்கை மலங்கச்* சரந்துரந்த*

வில்லாளனை* விட்டுசித்தன் விரித்த*

சொல்லார்ந்த அப்பூச்சிப்* பாடல் இவைபத்தும் வல்லார்போய்*

வைகுந்தம் மன்னியிருப்பரே. (2)      2.1.10.

 

இரண்டாம் திருமொழி

அரவணையாய்! ஆயரேறே!* அம்மம் உண்ணத் துயிலெழாயே*

இரவுமுண்ணாது உறங்கிநீபோய்* இன்றுமுச்சி கொண்டதாலோ*

வரவும்காணேன் வயிறசைந்தாய்* வனமுலைகள் சோர்ந்துபாய*

திருவுடைய வாய்மடுத்துத்* திளைத்து உதைத்துப் பருகிடாயே. (2) 2.2.1.

 

வைத்தநெய்யும் காய்ந்த பாலும்* வடிதயிரும் நறுவெண்ணெயும்*

இத்தனையும் பெற்றறியேன்* எம்பிரான்! நீ பிறந்தபின்னை*

எத்தனையும் செய்யப் பெற்றாய்* ஏதும்செய்யேன் கதம்படாதே*

முத்தனைய முறுவல் செய்து* மூக்குறுஞ்சி முலையுணாயே.    2.2.2.

 

தந்தம் மக்கள் அழுதுசென்றால்* தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்*

வந்துநின்மேல் பூசல்செய்ய* வாழவல்ல வாசுதேவா!*

உந்தையார் உன்திறத்தரல்லர்* உன்னை நான்ஒன்றுஉரப்பமாட்டேன்*

நந்தகோபன் அணிசிறுவா!* நான் சுரந்த முலையுணாயே.       2.2.3.

 

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட* கள்ளச்சகடு கலக்கழிய*

பஞ்சியன்ன மெல்லடியால்* பாய்ந்தபோது நொந்திடுமென்று*

அஞ்சினேன் காண் அமரர்கோவே!* ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல் ஓ*

கஞ்சனை உன் வஞ்சனையால்* வலைப்படுத்தாய்! முலையுணாயே.     2.2.4.

 

தீயபுந்திக் கஞ்சன் உன்மேல்* சினமுடையன் சோர்வுபார்த்து*

மாயந்தன்னால் வலைப்படுக்கில்* வாழகில்லேன் வாசுதேவா!*

தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்* சாற்றிச் சொன்னேன் போகவேண்டா*

ஆயர்பாடிக் கணிவிளக்கே!* அமர்ந்துவந்து என்முலையுணாயே.    2.2.5.

 

மின் அனைய நுண்ணிடையார்* விரிகுழல்மேல் நுழைந்தவண்டு*

இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்* இனிதமர்ந்தாய்! உன்னைக்கண்டார்*

என்ன நோன்பு நோற்றாள்கொலோ* இவனைப்பெற்ற வயிறுடையாள்*

என்னும் வார்த்தை எய்துவித்த* இருடீகேசா! முலையுணாயே.    2.2.6.

 

பெண்டிர்வாழ்வார் நின்னொப்பாரைப்* பெறுது மென்னும் ஆசையாலே*

கண்டவர்கள் போக்கொழிந்தார்* கண்ணிணையால் கலக்கநோக்கி*

வண்டுலாம் பூங்குழலினார்* உன்வாயமுதம் உண்ணவேண்டி*

கொண்டுபோவான் வந்துநின்றார்* கோவிந்தா! நீமுலையுணாயே.     2.2.7.

 

இருமலைபோல் எதிர்ந்த மல்லர்* இருவர் அங்கம் எரிசெய்தாய்!*

உன் திருமலிந்து திகழ்மார்வு* தேக்கவந்து என் அல்குலேறி*

ஒருமுலையை வாய்மடுத்து* ஒருமுலையை நெருடிக்கொண்டு*

இருமுலையும் முறைமுறையா* ஏங்கிஏங்கி இருந்துணாயே.    2.2.8.

 

அங்கமலப் போதகத்தில்* அணிகொள் முத்தம் சிந்தினாற்போல்*

செங்கமல முகம் வியர்ப்பத்* தீமை செய்து இம் முற்றத்தூடே*

அங்கமெல்லாம் புழுதியாக* அளையவேண்டா அம்ம! விம்ம*

அங்கு அமரர்க்கு அமுதளித்த* அமரர்கோவே! முலையுணாயே.     2.2.9.

 

ஓடவோடக் கிங்கிணிகள்* ஒலிக்கும் ஓசைப் பாணியாலே*

பாடிப்பாடி வருகின்றாயைப்* பற்பநாபன் என்று இருந்தேன்*

ஆடியாடி அசைந்து அசைந்திட்டு* அதனுக்கேற்ற கூத்தையாடி*

ஓடியோடிப் போய்விடாதே* உத்தமா! நீமுலையுணாயே.       2.2.10.

 

வாரணிந்த கொங்கையாய்ச்சி* மாதவா! உண்ணென்றமாற்றம்*

நீரணிந்த குவளைவாசம்* நிகழநாறும் வில்லிபுத்தூர்*

பாரணிந்த தொல்புகழான்* பட்டர்பிரான் பாடல்வல்லார்*

சீரணிந்த செங்கண்மால்மேல்* சென்ற சிந்தை பெறுவார்தாமே. (2) 2.2.11.

 

மூன்றாம் திருமொழி

போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்* பொருதிறல் கஞ்சன் கடியன்*

காப்பாரும் இல்லை கடல்வண்ணா* உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி*

பேய்ப்பால் முலை உண்ட பித்தனே!* கேசவநம்பீ! உன்னைக் காது குத்த*

ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்* அடைக்காய் திருத்தி நான் வைத்தேன். 2.3.1.

 

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி* மலர்ப்பாதக் கிங்கிணி யார்ப்ப*

நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத* நாராயணா! இங்கே வாராய்*

எண்ணற் கரிய பிரானே* திரியை எரியாமே காதுக்கு இடுவன்*

கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய* கனகக் கடிப்பும் இவையா!      2.3.2.

 

வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்* மகரக் குழை கொண்டு வைத்தேன்*

வெய்யவே காதில் திரியை இடுவன்* நீ வேண்டியது எல்லாம் தருவன்*

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய* ஒண் சுடர் ஆயர் கொழுந்தே*

மையன்மை செய்து இளஆய்ச்சியர் உள்ளத்து* மாதவனே! இங்கேவாராய்.  2.3.3.

 

வணநன்று உடைய வைரக் கடிப்பிட்டு*    வார்காது தாழப் பெருக்கி*

குணநன்று உடையர் இக்கோபால பிள்ளைகள்* கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்*

இணைநன்று அழகிய இக்கடிப்பு இட்டால்* இனிய பலாப் பழம் தந்து*

சுணநன்று அணிமுலை உண்ணத் தருவன் நான்* சோத்தம்பிரான்! இங்கே வாராய்.2.3.4.

 

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய்* சுரி குழலாரொடு நீ போய்*

கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்* குணம் கொண்டு இடுவேனா? நம்பீ*

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்* பிரானே! திரியிட வொட்டில்*

வேய்த் தடந்தோளார் விரும்பு கருங்குழல்* விட்டுவே! நீ இங்கே வாராய்.  2.3.5.

 

விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய்* உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி*

மண் எல்லாம் கண்டு என் மனத்து உள்ளே அஞ்சி* மதுசூதனே என்று இருந்தேன்*

புண் ஏதும் இல்லை உன்காதும் அறியும்* பொறுத்து இறைப் போது இருநம்பீ!

கண்ணா! என் கார்முகிலே!    கடல்வண்ணா* காவலனே! முலைஉணாயே.    2.3.6.

 

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி* நின் காதில் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு*

மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்துப்* பசுநிரை மேய்த்தாய்*

சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!* திருஆயர் பாடிப் பிரானே!*

தலை நிலாப்போதே உன் காதைப் பெருக்காதே* விட்டிட்டேன் குற்றமே அன்றே. 2.3.7.

 

என் குற்றமே என்று சொல்லவும் வேண்டாகாண்* என்னை நான் மண் உண்டேன்ஆக*

அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்* அனைவர்க்கும் காட்டிற்று இலையே*

வன்புற்று அரவின் பகைக்கொடி* வாமன நம்பீ! உன்காதுகள் தூரும்*

துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே* திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.   2.3.8.

 

மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்* தொடுப்பு உண்டாய் வெண்ணெயை என்று*

கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்* காணவே கட்டிற்று இலையே*

செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்* சிரீதரா! உன்காது தூரும்*

கையில் திரியை இடுகிடாய் இந்நின்ற* காரிகையார் சிரியாமே.    2.3.9.

 

காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்றென்* காதுகள் வீங்கி எறியில்*

தாரியாது ஆகில் தலை நொந்திடும் என்று* விட்டிட்டேன் குற்றமே யன்றே*

சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கித்* திரியவும் காண்டி*

ஏர்விடைசெற்று இளங்கன்று எறிந்திட்ட* இருடீகேசா! என்தன் கண்ணே!  2.3.10.

 

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்* கடி கமழ் பூங்குழலார்கள்*

எண்ணத்துள் என்றும் இருந்து* தித்திக்கும் பெருமானே! எங்கள் அமுதே*

உண்ணக் கனிகள் தருவன்* கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்*

பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட* பற்பநாபா! இங்கே வாராய்.     2.3.11.

 

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து* வலியவே காதில் கடிப்பை*

நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றென்* காதுகள் நொந்திடும் கில்லேன்*

நாவற் பழம் கொண்டு வைத்தேன்* இவை காணாய் நம்பீ*

முன் வஞ்ச மகளைச் சாவப்பால் உண்டு சகடிறப் பாய்ந்திட்ட* தாமோதரா! இங்கே வாராய்.

 

வார்காது தாழப் பெருக்கி அமைத்து* மகரக் குழையிட வேண்டி*

சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்* சிந்தை உள் நின்று திகழ*

பாரார் தொல் புகழான் புதுவை மன்னன்* பன்னிரு நாமத்தால் சொன்ன*

ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார்* அச்சுதனுக்கு அடியாரே.       2.3.13.

 

 

நாலாம் திருமொழி

வெண்ணெயளைந்த குணுங்கும்* விளையாடு புழுதியும் கொண்டு*

திண்ணென இவ்விரா உன்னைத்* தேய்த்துக் கிடக்க நான்ஒட்டேன்*

எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு* இங்கு எத்தனைபோதும் இருந்தேன்*

நண்ணலரியபிரானே!* நாரணா! நீராடவாராய். (2)   2.4.1.

 

கன்றுகள் ஓடச்செவியில்* கட்டெறும்பு பிடித்திட்டால்*

தென்றிக் கெடுமாகில்* வெண்ணெய்திரட்டி விழுங்குமாகாண்பன்*

நின்ற மராமரம் சாய்த்தாய்!* நீ பிறந்த திருவோணம்*

இன்று நீ நீராடவேண்டும்* எம்பிரான்! ஓடாதேவாராய்.   2.4.2.

 

பேய்ச்சிமுலை உண்ணக்கண்டு* பின்னையும் நில்லாது என்னெஞ்சம்*

ஆய்ச்சியர் எல்லாம்கூடி* அழைக்கவும் நான்முலைதந்தேன்*

காய்ச்சின நீரொடு நெல்லி* கடாரத்தில் பூரித்துவைத்தேன்*

வாய்த்தபுகழ் மணிவண்ணா!* மஞ்சனமாடநீவாராய்.    2.4.3.

 

கஞ்சன் புணர்ப்பினில் வந்த* கடியசகடம் உதைத்து*

வஞ்சகப் பேய்மகள் துஞ்ச* வாய்முலை வைத்தபிரானே!*

மஞ்சளும் செங்கழுநீரின்* வாசிகையும் நாறுசாந்தும்*

அஞ்சனமும் கொண்டுவைத்தேன்* அழகனே! நீராடவாராய்.  2.4.4.

 

அப்பம் கலந்த சிற்றுண்டி* அக்காரம் பாலில் கலந்து*

சொப்பட நான் சுட்டுவைத்தேன்* தின்னல் உறிதியேல்நம்பீ!*

செப்பிள மென்முலையார்கள்* சிறுபுறம் பேசிச்சிரிப்பர்*

சொப்பட நீராடவேண்டும்* சோத்தம்பிரான்! இங்கேவாராய்.  2.4.5.

 

எண்ணெய்க் குடத்தை உருட்டி* இளம்பிள்ளை கிள்ளியெழுப்பி*

கண்ணைப் புரட்டி விழித்துக்* கழகண்டு செய்யும்பிரானே!*

உண்ணக் கனிகள் தருவன்* ஒலிகடல் ஓதநீர்போலே*

வண்ணம் அழகியநம்பீ!* மஞ்சனமாட நீவாராய்.    2.4.6.

 

கறந்தநற் பாலும் தயிரும்* கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்*

பிறந்ததுவே முதலாகப்* பெற்றறியேன் எம்பிரானே!*

சிறந்தநற்றாய் அலர்தூற்றும்* என்பதனால் பிறர்முன்னே*

மறந்தும் உரையாட மாட்டேன்* மஞ்சனமாட நீவாராய்.  2.4.7.

 

கன்றினை வாலோலை கட்டிக்* கனிகள் உதிரஎறிந்து*

பின்தொடர்ந்து ஓடிஓர்பாம்பைப்* பிடித்துக்கொண்டு ஆட்டினாய்போலும்*

நின்திறத்தே நல்லேன்நம்பீ!* நீபிறந்த திருநல்நாள்*

நன்று நீநீராட வேண்டும்* நாரணா! ஓடாதேவாராய்.   2.4.8.

 

பூணித் தொழுவினில் புக்குப்* புழுதியளைந்த பொன்மேனி*

காணப்பெரிதும் உகப்பன்* ஆகிலும் கண்டார் பழிப்பர்*

நாணெத்தனையும் இலாதாய்!* நப்பின்னை காணில்சிரிக்கும்*

மாணிக்கமே! என்மணியே!* மஞ்சனமாட நீவாராய்.      2.4.9.

 

கார்மலி மேனி நிறத்துக்* கண்ணபிரானை உகந்து*

வார்மலி கொங்கை யசோதை* மஞ்சன மாட்டியவாற்றை*

பார்மலிதொல் புதுவைக்கோன்* பட்டர்பிரான் சொன்னபாடல்*

சீர்மலி செந்தமிழ் வல்லார்* தீவினையாதும் இலரே. (2)   2.4.10.

 

 

ஐந்தாம் திருமொழி

பின்னை மணாளனைப்* பேரில்கிடந்தானை*

முன்னையமரர்* முதல்தனிவித்தினை*

என்னையும் எங்கள்* குடிமுழுது ஆட்கொண்ட*

மன்னனைவந்து குழல்வாராய்அக்காக்காய்!* மாதவன்தன் குழல்வாராய்அக்காக்காய்! (2) 1.

 

பேயின்முலையுண்ட* பிள்ளைஇவன்முன்னம்*

மாயச்சகடும்* மருதும்இறுத்தவன்*

காயாமலர்வண்ணன்* கண்ணன்கருங்குழல்*

தூய்தாகவந்து குழல்வாராய்அக்காக்காய்!* தூமணிவண்ணன் குழல்வாராய்அக்காக்காய்! 2.

 

திண்ணக்கலத்தில்* திரையுறிமேல்வைத்த*

வெண்ணெய்விழுங்கி* விரையஉறங்கிடும்*

அண்ணல் அமரர்* பெருமானை ஆயர்தம்*

கண்ணனைவந்து குழல்வாராய்அக்காக்காய்!* கார்முகில்வண்ணன் குழல்வாராய்அக்காக்காய்!  3.

 

பள்ளத்தில்மேயும்* பறவையுருக்கொண்டு*

கள்ளவசுரன்* வருவானைத் தான்கண்டு*

புள்ளிதுவென்று* பொதுக்கோவாய்கீண்டிட்ட*

பிள்ளையைவந்து குழல்வாராய்அக்காக்காய்!* பேய்முலையுண்டான் குழல்வாராய்அக்காக்காய்!

 

கற்றினம் மேய்த்துக்* கனிக்கு ஒருகன்றினை*

பற்றியெறிந்த* பரமன்திருமுடி*

உற்றனபேசி* நீஓடித்திரியாதே*

அற்றைக்கும்வந்து குழல்வாராய்அக்காக்காய்!* ஆழியான்தன் குழல்வாராய்அக்காக்காய்!

 

கிழக்கில் குடிமன்னர்* கேடிலாதாரை*

அழிப்பான் நினைந்திட்டு* அவ்வாழியதனால்*

விழிக்குமளவிலே* வேரறுத்தானை*

குழற்குஅணியாகக் குழல்வாராய்அக்காக்காய்!* கோவிந்தன்தன் குழல்வாராய்அக்காக்காய்!

 

பிண்டத்திரளையும்* பேய்க்கு இட்டநீர்ச்சோறும்*

உண்டற்குவேண்டி* நீஓடித் திரியாதே*

அண்டத்துஅமரர்* பெருமான் அழகமர்*

வண்டொத்திருண்ட குழல்வாராய்அக்காக்காய்!* மாயவன்தன் குழல்வாராய்அக்காக்காய்!

 

உந்தியெழுந்த* உருவமலர்தன்னில்*

சந்தச்சதுமுகன்* தன்னைப் படைத்தவன்*

கொந்தக் குழலைக்* குறந்து புளியட்டி*

தந்தத்தின்சீப்பால் குழல்வாராய்அக்காக்காய்!*             தாமோதரன்தன் குழல்வாராய்அக்காக்காய்!

 

மன்னன் தன் தேவிமார்* கண்டு மகிழ்வெய்த*

முன்இவ் உலகினை* முற்றும் அளந்தவன்*

பொன்னின் முடியினைப்* பூவணை மேல்வைத்து*

பின்னேயிருந்து குழல்வாராய்அக்காக்காய்!* பேராயிரத்தான் குழல்வாராய்அக்காக்காய்!

 

கண்டார்பழியாமே* அக்காக்காய்!*

கார்வண்ணன் வண்டார் குழல்வார* வாவென்ற ஆய்ச்சிசொல்*

விண்தோய்மதிள்* வில்லிபுத்தூர்க்கோன் பட்டன்சொல்*

கொண்டாடிப்பாடக்* குறுகாவினைதாமே! 2.5.10 (2) 

 

 

ஆறாம் திருமொழி

வேலிக்கோல்வெட்டி* விளையாடு வில்லேற்றி*

தாலிக்கொழுந்தைத்* தடங்கழுத்தில் பூண்டு*

பீலித்தழையைப்* பிணைத்துப் பிறகிட்டு*

காலிப்பின்போவாற்குஓர் கோல்கொண்டுவா!* கடல்நிறவண்ணற்குஓர் கோல்கொண்டுவா. 2.6.1.

 

கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்*

எங்கும் திரிந்து* விளையாடும் என்மகன்*

சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க*

நல்அங்கமுடையதோர் கோல்கொண்டுவா!* அரக்குவழித்ததோர் கோல்கொண்டுவா. 2.6.2.

 

கறுத்திட்டு எதிர்நின்ற* கஞ்சனைக் கொன்றான்*

பொறுத்திட்டு எதிர்வந்த* புள்ளின்வாய் கீண்டான்*

நெறித்த குழல்களை* நீங்கமுன்னோடி*

சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர் கோல்கொண்டுவா!* தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 2.6.3.

 

ஒன்றே உரைப்பான்* ஒருசொல்லே சொல்லுவான்*

துன்றுமுடியான்* துரியோதனன் பக்கல்*

சென்று அங்குப் பாரதம்* கையெறிந்தானுக்கு*

கன்றுகள்மேய்ப்பதோர் கோல்கொண்டுவா* கடல்நிறவண்ணர்க்குஓர் கோல்கொண்டுவா. 2.6.4.

 

சீரொன்று தூதாய்த்* துரியோதனன் பக்கல்*

ஊரொன்று வேண்டிப்* பெறாத உரோடத்தால்*

பாரொன்றிப் பாரதம்* கைசெய்து பார்த்தற்குத்*

தேரொன்றையூர்ந்தாற்குஓர் கோல்கொண்டுவா* தேவபிரானுக்குஓர் கோல்கொண்டுவா. 2.6.5.

 

ஆலத்திலையான்* அரவினணை மேலான்*

நீலக்கடலுள்* நெடுங்காலம் கண்வளர்ந்தான்*

பாலப்பிராயத்தே* பார்த்தர்க்கு அருள்செய்த*

கோலப்பிரானுக்குஓர் கோல்கொண்டுவா* குடந்தைக்கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா.2.6.6.

 

பொன்திகழ்* சித்திரகூடப் பொருப்பினில்*

உற்றவடிவில்* ஒருகண்ணும் கொண்ட*

அக்கற்றைக் குழலன்* கடியன் விரைந்து உன்னை*

மற்றைக்கண்கொள்ளாமே கோல்கொண்டுவா!* மணிவண்ணநம்பிக்குஓர் கோல்கொண்டுவா.

 

மின்னிடைச் சீதைபொருட்டா* இலங்கையர்*

மன்னன் மணிமுடி* பத்தும் உடன்வீழ*

தன்னிகர் ஒன்றில்லாச்* சிலைகால் வளைத்திட்ட*

மின்னுமுடியற்குஓர் கோல்கொண்டுவா!* வேலையடைத்தாற்குஓர் கோல்கொண்டுவா. 2.6.8.

 

தென்னிலங்கை மன்னன்* சிரம்தோள் துணிசெய்து*

மின்னிலங்குபூண்* விபீடணநம்பிக்கு*

என்னிலங்கு நாமத்தளவும்* அரசென்ற*

மின்னிலங்காரற்குஓர் கோல்கொண்டுவா!* வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா. 2.6.9

 

அக்காக்காய்! நம்பிக்குக்* கோல்கொண்டு வாவென்று*

மிக்காள் உரைத்தசொல்* வில்லிபுத்தூர்ப்பட்டன்*

ஒக்க உரைத்த* தமிழ்பத்தும் வல்லவர்*

மக்களைப் பெற்று* மகிழ்வர் இவ்வையத்தே.   2.6.10.

 

 

ஏழாம் திருமொழி

ஆனிரை மேய்க்க நீபோதி* அருமருந்து ஆவதறியாய்*

கானகம் எல்லாம் திரிந்து* உன்கரிய திருமேனிவாட*

பானையில் பாலைப் பருகிப்* பற்றாதார் எல்லாம் சிரிப்ப*

தேனில் இனியபிரானே!* செண்பகப்பூச் சூட்டவாராய். (2)   2.7.1.

 

கருவுடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும்கண்கள்*

உருவுடையாய்! உலகேழும்* உண்டாக வந்து பிறந்தாய்!*

திருவுடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!*

மருவிமணம் கமழ்கின்ற* மல்லிகைப்பூச் சூட்டவாராய்.   2.7.2.

 

மச்சொடு மாளிகை ஏறி* மாதர்கள் தம்மிடம்புக்கு*

கச்சொடு பட்டைக் கிழித்துக்* காம்பு துகிலவைகீறி*

நிச்சலும் தீமைகள் செய்வாய்!* நீள் திருவேங்கடத்து எந்தாய்!*

பச்சைத் தமனகத்தோடு* பாதிரிப்பூச் சூட்டவாராய்.  2.7.3.

 

தெருவின்கண் நின்று இளவாய்ச்சிமார்களைத்* தீமைசெய்யாதே*

மருவும் தமனகமும்சீர்* மாலை மணம் கமழ்கின்ற*

புருவம் கருங்குழல் நெற்றி* பொலிந்த முகிற் கன்றுபோலே*

உருவமழகியநம்பீ!* உகந்திவை சூட்டநீவாராய்.    2.7.4.

 

புள்ளினை வாய் பிளந்திட்டாய்!* பொருகரியின் கொம்பொசித்தாய்!*

கள்ளவரக்கியை மூக்கொடு* காவலனைத் தலைகொண்டாய்!*

அள்ளி நீ வெண்ணெய் விழுங்க* அஞ்சாது அடியேன் அடித்தேன்*

தெள்ளிய நீரில் எழுந்த* செங்கழுநீர் சூட்டவாராய்.   2.7.5.

 

எருதுகளோடு பொருதி* ஏதும் உலோபாய்காண் நம்பி!*

கருதிய தீமைகள் செய்து* கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!*

தெருவின்கண் தீமைகள் செய்து* சிக்கென மல்லர்களோடு*

பொருது வருகின்ற பொன்னே!* புன்னைப்பூச் சூட்டவாராய்.  2.7.6.

 

குடங்கள் எடுத்தேறவிட்டுக்* கூத்தாட வல்லஎம்கோவே!*

மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்யவல்ல என்மைந்தா!*

இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இருபிளவாக முன்கீண்டாய்!*

குடந்தைக் கிடந்த எம்கோவே!* குருக்கத்திப்பூச் சூட்டவாராய். 2.7.7.

 

சீமாலிகன் அவேனாடு* தோழமை கொள்ளவும் வல்லாய்!*

சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால் தலைகொண்டாய்!*

ஆமாறறியும்பிரானே!* அணியரங்கத்தே கிடந்தாய்!*

ஏமாற்றம் என்னைத்தவிர்த்தாய்!* இருவாட்சிப்பூச் சூட்டவாராய்.  2.7.8.

 

அண்டத்தமரர்கள் சூழ* அத்தாணியுள் அங்கிருந்தாய்!*

தொண்டர்கள் நெஞ்சிலுறைவாய்!* தூமலராள் மணவாளா!*

உண்டிட்டு உலகினையேழும்* ஓராலிலையில் துயில்கொண்டாய்!*

கண்டுநான் உன்னை உகக்கக்* கருமுகைப்பூச் சூட்டவாராய்.   2.7.9.

 

செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி*

எண்பகர் பூவும் கொணர்ந்தேன்* இன்று இவை சூட்டவாவென்று*

மண்பகர் கொண்டானை* ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்தஇம்மாலை*

பண்பகர் வில்லிபுத்தூர்க்கோன்* பட்டர்பிரான் சொன்னபத்தே. (2)  2.7.10.

 

 

எட்டாம் திருமொழி

இந்திரேனாடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்*

மந்திர மாமலர் கொண்டு* மறைந்துஉவராய் வந்து நின்றார்*

சந்திரன் மாளிகை சேரும்* சதிரர்கள் வெள்ளறை நின்றாய்*

அந்தியம் போது இதுவாகும்* அழகனே! காப்பிடவாராய். (2)  2.8.1.

 

கன்றுகள் இல்லம் புகுந்து* கதறுகின்ற பசு எல்லாம்*

நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி* நேசமேல் ஒன்றும் இலாதாய்!*

மன்றில் நில்லேல் அந்திப் போது* மதிள்திரு வெள்ளறை நின்றாய்!*

நன்று கண்டாய் என் தன் சொல்லு* நான் உன்னைக் காப்பிடவாராய். 2.8.2.

 

செப்போது மென் முலையார்கள்* சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு*

அப்போது நான் உரப்பப்போய்* அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!*

முப்போதும் வானவர் ஏத்தும்* முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!

இப்போது நான் ஒன்றும் செய்யேன்* எம்பிரான்! காப்பிடவாராய்.    2.8.3.

 

கண்ணில் மணல் கொடு தூவிக்* காலினால் பாய்ந்தனை என்றுஎன்று*

எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு* இவரால் முறைப்படு கின்றார்*

கண்ணனே! வெள்ளறை நின்றாய்!* கண்டாரோடே தீமை செய்வாய்!

வண்ணமே வேலைய தொப்பாய்!* வள்ளலே! காப்பிடவாராய்.   2.8.4.

 

பல்லாயிரவர் இவ்வூரில்* பிள்ளைகள் தீமைகள் செய்வார்*

எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது* எம்பிரான்! நீ இங்கே வாராய்*

நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!* ஞானச்சுடரே! உன் மேனி*

சொல்லார வாழ்த்தி நின்று ஏத்திச்* சொப்படக் காப்பிடவாராய். 2.8.5.

 

கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்* கருநிறச் செம்மயிர்ப் பேயை*

வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு*

மஞ்சு தவழ் மணிமாட* மதிள்திரு வெள்ளறை நின்றாய்!

அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே! காப்பிடவாராய்.   2.8.6.

 

கள்ளச் சகடும் மருதும்* கலக்கழிய உதை செய்த*

பிள்ளையரசே!* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை*

உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளிஉடை வெள்ளறை நின்றாய்!*

பள்ளி கொள் போது இதுவாகும்* பரமனே! காப்பிடவாராய்.   2.8.7.

 

இன்பம் அதனை உயர்த்தாய்!* இமையவர்க்கு என்றும் அரியாய்!*

கும்பக் களிறட்ட கோவே!* கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!*

செம்பொன் மதிள் வெள்ளறையாய்!* செல்வத்தினால் வளர் பிள்ளாய்!

கம்பக் கபாலி காண் அங்குக்* கடி தோடிக் காப்பிடவாராய்.     2.8.8.

 

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு* எழில் மறையோர் வந்து நின்றார்*

தருக்கேல்நம்பி! சந்தி நின்று* தாய் சொல்லுக் கொள்ளாய் சிலநாள்*

திருக்காப்பு நான் உன்னைச் சாத்தத்* தேசுடை வெள்ளறை நின்றாய்!*

உருக்காட்டும் அந்தி விளக்கு* இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்.  2.8.9.

 

போதமர் செல்வக் கொழுந்து* புணர் திருவெள்ளறை யானை*

மாதர்க் குயர்ந்த அசோதை* மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்*

வேதப் பயன் கொள்ள வல்ல* விட்டுசித்தன் சொன்ன மாலை*

பாதப் பயன் கொள்ள வல்ல* பத்தருள்ளார் வினை போமே. (2)  2.8.10.

 

 

ஒன்பதாம் திருமொழி

வெண்ணெய்விழுங்கி வெறுங்கலத்தை* வெற்பிடையிட்டு அதேனாசைகேட்கும்*

கண்ணபிரான் கற்ற கல்விதன்னைக்* காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*

புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும்தீமை* புரைபுரையால் இவைசெய்யவல்ல

அண்ணற்கண்ணானோர் மகனைப் பெற்ற* அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய். 2.9.1.

 

வருக வருக வருக இங்கே* வாமனநம்பீ! வருக இங்கே*

கரியகுழல் செய்யவாய் முகத்துக்* காகுத்தநம்பீ! வருகஇங்கே*

அரியனிவன் எனக்கு இன்றுநங்காய்!* அஞ்சனவண்ணா! அசலகத்தார்*

பரிபவம்பேசத் தரிக்ககில்லேன்* பாவியேனுக்கு இங்கே போதராயே.  2.9.2.

 

திருவுடைப் பிள்ளை தான் தீயவாறு* தேக்கம் ஒன்றுமிலன் தேசுடையன்*

உருகவைத்த குடத்தொடு வெண்ணெய்* உறிஞ்சிய் உடைத்திட்டுப் போந்து நின்றான்*

அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான்* வழக்கோ? அசோதாய்!*

வருக வென்று உன்மகன் தன்னைக்கூவாய்* வாழவொட்டான் மதுசூதனனே.    2.9.3.

 

கொண்டல் வண்ணா! இங்கே போதராயே* கோயிற்பிள்ளாய்! இங்கே போதராயே*

தெண்திரைசூழ் திருப்பேர்க் கிடந்த* திருநாரணா! இங்கே போதராயே*

உண்டுவந்தேன் அம்மம் என்றுசொல்லி* ஓடி அகம்புக ஆய்ச்சிதானும்*

கண்டெதிரே சென்றெடுத்துக் கொள்ளக்* கண்ணபிரான் கற்ற கல்விதானே.  2.9.4.

 

பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப்* பல்வளையாள் என்மகள் இருப்ப*

மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று* இறைப்பொழுது அங்கே பேசிநின்றேன்*

சாளக்கிராமம் உடைய நம்பி* சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்*

ஆலைக் கரும்பின் மொழி அனைய* அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய். 2.9.5.

 

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்* போதரேன் என்னாதே போதர் கண்டாய்*

ஏதேனும் சொல்லி அசலகத்தார்* ஏதேனும்பேச நான் கேட்கமட்டேன்*

கோதுகலமுடைக் குட்டனேயா!* குன்றெடுத்தாய்! குடமாடுகூத்தா!*

வேதப்பொருளே! என்வேங்கடவா!* வித்தகனே! இங்கேபோதராயே.    2.9.6.

 

செந்நெல் அரிசி சிறுபருப்புச்* செய்த அக்காரம் நறுநெய் பாலால்*

பன்னிரண்டு திருவோணம் அட்டேன்* பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்*

இன்னமுகப்பன் நான் என்றுசொல்லி* எல்லாம்விழுங்கிட்டுப் போந்து நின்றான்*

உன்மகன் தன்னை அசோதை நங்காய்!* கூவிக்கொள்ளாய் இவையும் சிலவே. 2.9.7.

 

கேசவனே! இங்கே போதராயே* கில்லேன் என்னாது இங்கே போதராயே*

நேசமிலாதார் அகத்திருந்து* நீ விளையாடாதே போதராயே*

தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்* தொண்டரும் நின்ற இடத்தில் நின்று*

தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்* தாமோதரா! இங்கேபோதராயே. 2.9.8.

 

கன்னல் இலட்டுவத்தோடு சீடை* கார் எள்ளின் உண்டை கலத்திலிட்டு*

என்னகம் என்று நான்வைத்துப் போந்தேன்* இவன்புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்*

பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப்* பிறங்கொளி வெண்ணெயும் சோதிக்கின்றான்*

உன்மகன் தன்னை யசோதைநங்காய்!* கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே.    2.9.9.

 

சொல்லில் அரசிப்படுதி நங்காய்!* சுழலுடையன் உன்பிள்ளை தானே*

இல்லம்புகுந்து என்மகளைக் கூவிக்* கையில் வளையைக் கழற்றிக் கொண்டு*

கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற* அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து*

நல்லன நாவற்பழங்கள் கொண்டு* நானல்லேன் என்று சிரிக்கின்றானே.    2.9.10.

 

வண்டு களித்திரைக்கும் பொழில்சூழ்* வருபுனல் காவிரித் தென்னரங்கன்*

பண்டவன்செய்த கிரீடையெல்லாம்* பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்*

கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார்* கோவிந்தன் தன் அடியார்களாகி*

எண்திசைக்கும் விளக்காகி நிற்பார்* இணையடி என் தலைமேலனவே. (2)   2.9.11.

 

பத்தாம் திருமொழி

ஆற்றிலிருந்து* விளையாடுவோங்களை*

சேற்றாலெறிந்து* வளைதுகில் கைக்கொண்டு*

காற்றின் கடியனாய்* ஓடி அகம்புக்கு*

மாற்றமும்தாரானால் இன்றுமுற்றும்* வளைத்திறம்பேசானால் இன்றுமுற்றும். (2)  2.10.1.

 

குண்டலம் தாழக்* குழல்தாழ நாண்தாழ*

எண்திசையோரும்* இறைஞ்சித் தொழுதேத்த*

வண்டமர் பூங்குழலார்* துகில் கைக்கொண்டு*

விண்தோய்மரத்தானால் இன்றுமுற்றும்* வேண்டவும்தாரானால் இன்றுமுற்றும்.  2.10.2.

 

தடம்படு தாமரைப்* பொய்கை கலக்கி*

விடம்படு நாகத்தை* வால்பற்றி ஈர்த்து*

படம்படு பைந்தலை* மேலெழப் பாய்ந்திட்டு*

உடம்பைய் அசைத்தானால் இன்றுமுற்றும்* உச்சியில் நின்றானால் இன்றுமுற்றும்.

 

தேனுகன்* ஆவிசெகுத்து*

பனங்கனி தானெறிந்திட்ட* தடம்பெரும் தோளினால்*

வானவர் கோன்விட* வந்த மழை தடுத்து*

ஆனிரை காத்தானால் இன்றுமுற்றும்* அவை உய்யக்கொண்டானால் இன்றுமுற்றும்.

 

ஆய்ச்சியர்சேரி* அளைதயிர் பாலுண்டு*

பேர்த்தவர் கண்டுபிடிக்கப்* பிடியுண்டு*

வேய்த்தடன் தோளினார்* வெண்ணெய் கொள்மாட்டாது*

அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்றுமுற்றும்* அடியுண்டு அழுதானால் இன்றுமுற்றும்.  

 

தள்ளித் தளிர்நடையிட்டு* இளம்பிள்ளையாய்*

உள்ளத்தின் உள்ளே* அவளை உறநோக்கி*

கள்ளத்தினால்வந்த* பேய்ச்சி முலையுயிர்*

துள்ள ச்சுவைத்தானால் இன்றுமுற்றும்* துவக்கற உண்டானால் இன்றுமுற்றும். 2.10.6.

 

மாவலி வேள்வியில்* மாண் உருவாய்ச் சென்று*

மூவடி தாவென்று* இரந்த இம்மண்ணினை*

ஓரடியிட்டு* இரண்டாம் அடிதன்னிலே*

தாவடியிட்டானால் இன்றுமுற்றும்*  தரணியளந்தானால் இன்றுமுற்றும்.   2.10.7.

 

தாழை தண்ணாம்பல்* தடம்பெரும் பொய்கைவாய்*

வாழுமுதலை* வலைப்பட்டு வாதிப்புண்*

வேழம் துயர்கெட* விண்ணோர் பெருமானாய்*

ஆழிபணி கொண்டானால் இன்றுமுற்றும்* அதற்கு அருள்செய்தானால் இன்றுமுற்றும். 8.

 

வானத்தெழுந்த* மழைமுகில்போல்*

எங்கும் கானத்து மேய்ந்து* களித்து விளையாடி*

ஏனத்துருவாய்* இடந்த இம்மண்ணினை*

தானத்தே வைத்தானால் இன்றுமுற்றும்   தரணி யிடந்தானால் இன்றுமுற்றும். 2.10.9.

 

அங்கமலக் கண்ணன் தன்னை* யசோதைக்கு*

மங்கை நல்லார்கள்* தாம் வந்து முறைப்பட்ட*

அங்கவர்சொல்லைப்* புதுவைப்கோன் பட்டன்சொல்*

இங்கு இவை வல்லவர்க்கு* ஏதம் ஒன்றில்லையே. (2)   2.10.10.