நான்காம்பத்து
முதல் திருமொழி
கதிராயிரம் இரவி* கலந்தெரித்தாலொத்த நீள்முடியன்*
எதிரில் பெருமை இராமனை* இருக்குமிடம் நாடுதிரேல்*
அதிரும் கழற் பொருதோள்* இரணியனாகம் பிளந்து* அரியாய்-
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை* உள்ளவா கண்டாருளர். (2) 4.1.1.
நாந்தகம் சங்கு தண்டு* நாணொலிச் சார்ங்கம் திருச்சக்கரம்*
ஏந்துபெருமை இராமனை* இருக்குமிடம் நாடுதிரேல்*
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக்* கடுஞ்சிலை சென்றிறுக்க*
வேந்தர் தலைவன் சனக ராசன்தன்* வேள்வியில் கண்டாருளர். 4.1.2.
கொலை யானைக் கொம்பு பறித்துக்* கூடலர்சேனை பொருதழிய*
சிலையால் மராமரமெய்த தேவனைச்* சிக்கென நாடுதிரேல்*
தலையால் குரக்கினம் தாங்கிச்சென்று* தடவரை கொண்டு அடைப்ப*
அலையார் கடற்கரை வீற்றிருந்தானை* அங்குத்தைக் கண்டாருளர். 4.1.3.
தோயம் பரந்த நடுவுசூழலில்* தொல்லை வடிவுகொண்ட*
மாயக் குழவியதனை நாடுறில்* வம்மின் சுவடுரைக்கேன்*
ஆயர் மடமகள் பின்னைக்காகி* அடல் விடை ஏழினையும்*
வீயப் பொருது வியர்த்து நின்றானை* மெய்ம்மையே கண்டாருளர். 4.1.4.
நீரேறு செஞ்சடை நீலகண்டனும்* நான்முகனும் முறையால்*
சீரேறு வாசகஞ் செய்ய நின்ற* திருமாலை நாடுதிரேல்*
வாரேறு கொங்கை உருப்பிணியை* வலியப் பிடித்துக் கொண்டு-
தேரேற்றி* சேனைநடுவு போர்செய்யச்* சிக்கெனக் கண்டாருளர். 4.1.5.
பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்* புணர் முலைவாய் மடுக்க-
வல்லானை* மாமணிவண்ணனை* மருவுமிடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந்தேவிமாரொடு* பௌவம் ஏறி துவரை*
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே* இருந்தானைக் கண்டாருளர். 4.1.6.
வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம்* ஏந்துகையன்*
உள்ளவிடம் வினவில்* உமக்கு இறை வம்மின் சுவடுரைக்கேன்*
வெள்ளைப்புரவிக் குரக்குவெல் கொடித்* தேர்மிசை முன்புநின்று*
கள்ளப் படைத் துணையாகிப்* பாரதம் கைசெய்யக் கண்டாருளர். 4.1.7.
நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற* அரசர்கள் தம்முகப்பே*
நாழிகை போகப்படை பொருதவன்* தேவகிதன் சிறுவன்*
ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச்* சயத்திரதன் தலையை*
பாழில் உருளப் படைபொருதவன்* பக்கமே கண்டாருளர். 4.1.8.
மண்ணும் மலையும் மறிகடல்களும்* மற்றும் யாவுமெல்லாம்*
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச்* சிக்கென நாடுதிரேல்*
எண்ணற்கரியதோர் ஏனமாகி* இருநிலம்புக் கிடந்து*
வண்ணக் கருங்குழல் மாதரோடு* மணந்தானைக் கண்டாருளர். 4.1.9.
கரியமுகில் புரைமேனி மாயனைக்* கண்ட சுவடுரைத்து*
புரவிமுகம் செய்து செந்நெலோங்கி* விளை கழனிப்புதுவை*
திருவிற் பொலி மறைவாணன்* பட்டர்பிரான் சொன்ன மாலைபத்தும்*
பரவு மனமுடைப் பத்தருள்ளார்* பரமனடி சேர்வர்களே. (2) 4.1.10.
இரண்டாம் திருமொழி
அலம்பாவெருட்டாக்* கொன்று திரியும் அரக்கரை*
குலம் பாழ் படுத்துக்* குலவிளக்காய் நின்ற கோன்மலை*
சிலம்பார்க் கவந்து* தெய்வ மகளிர்களாடும் சீர்*
சிலம்பாறு பாயும்* தென்திருமாலிருஞ்சோலையே. (2) 4.2.1.
வல்லாளன் தோளும்* வாளரக்கன் முடியும்* தங்கை-
பொல்லாத மூக்கும்* போக்குவித்தான் பொருந்தும்மலை*
எல்லாவிடத்தில் எங்கும்பரந்து* பல்லாண்டொலி*
செல்லா நிற்கும் சீர்த்* தென்திருமாலிருஞ்சோலையே. 4.2.2.
தக்கார் மிக்கார்களைச்* சஞ்சலம்செய்யும் சலவரை*
தெக்கா நெறியே போக்குவிக்கும்* செல்வன் பொன்மலை*
எக் காலமும் சென்று* சேவித்திருக்கும் அடியரை*
அக்கானெறியை மாற்றும்* தண் திருமாலிருஞ்சோலையே. 4.2.3.
ஆனாயர்கூடி* அமைத்த விழவை* அமரர்தம்-
கோனார்க் கொழியக்* கோவர்த்தனத்துச் செய்தான் மலை*
வானாட்டில்நின்று* மாமலர்க் கற்பகத் தொத்திழி*
தேனாறுபாயும்* தென்திருமாலிருஞ்சோலையே. 4.2.4.
ஒருவாரணம் பணிகொண்டவன்* பொய்கையில்* கஞ்சன்தன்-
ஒருவாரணம் உயிருண்டவன்* சென்றுறையும்மலை*
கருவாரணம்* தன்பிடி துறந்தோட* கடல்வண்ணன்-
திருவாணை கூறத்திரியும்* தண்திருமாலிருஞ்சோலையே. 4.2.5.
ஏவிற்றுச்செய்வான்* ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை*
சாவத் தகர்த்த* சாந்தணி தோள் சதுரன்மலை*
ஆவத்தனமென்று* அமரர்களும் நன்முனிவரும்*
சேவித்திருக்கும்* தென்திருமாலிருஞ்சோலையே. 4.2.6.
மன்னர் மறுக* மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்*
முன்னங்கு நின்று* மோழை யெழுவித்தவன் மலை*
கொன்னவில் கூர்வேற்கோன்* நெடுமாறன் தென்கூடற்கோன்*
தென்னன் கொண்டாடும்* தென்திருமாலிருஞ்சோலையே. 4.2.7.
குறுகாத மன்னரைக்* கூடுகலக்கி* வெங்கானிடைச்-
சிறுகால் நெறியே போக்குவிக்கும்* செல்வன் பொன்மலை*
அறுகால் வரிவண்டுகள்* ஆயிரநாமம் சொல்லி*
சிறுகாலைப் பாடும்* தென்திருமாலிருஞ்சோலையே. 4.2.8.
சிந்தப்புடைத்துச்* செங்குருதிகொண்டு* பூதங்கள்-
அந்திப்பலி கொடுத்து* ஆவத்தனம் செய் அப்பன்மலை*
இந்திர கோபங்கள்* எம்பெருமான் கனிவாய் ஒப்பான்*
சிந்தும் புறவில்* தென்திருமாலிருஞ்சோலையே. 4.2.9.
எட்டுத் திசையும்* எண்ணிறந்த பெருந்தேவிமார்*
விட்டு விளங்க* வீற்றிருந்த விமலன் மலை*
பட்டிப் பிடிகள்* பகடு உ றிஞ்சிச் சென்று* மாலைவாய்த்-
தெட்டித் திளைக்கும்* தென்திருமாலிருஞ்சோலையே. 4.2.10.
மருதப் பொழிலணி* மாலிருஞ்சோலை மலைதன்னை*
கருதியுறைகின்ற* கார்க் கடல் வண்ணனம்மான் தன்னை*
விரதம் கொண்டேத்தும்* வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல்*
கருதியுரைப்பவர்* கண்ணன் கழலிணை காண்பார்களே. (2) 4.2.11.
மூன்றாம் திருமொழி
உருப்பிணி நங்கை தன்னைமீட்பான்* தொடர்ந்தோடிச் சென்ற*
உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு* உறைத்திட்ட உறைப்பன்மலை*
பொருப்பிடைக் கொன்றை நின்று* முறியாழியும் காசும் கொண்டு*
விருப்பொடு பொன்வழங்கும்* வியன்மாலிருஞ்சோலையதே. (2) 4.3.1.
கஞ்சனும் காளியனும்* களிறும் மருதும் எருதும்*
வஞ்சனையில் மடிய* வளர்ந்த மணிவண்ணன் மலை*
நஞ்சுமிழ் நாகமெழுந்தணவி* நளிர்மாமதியை*
செஞ்சுடர் நாவளைக்கும்* திருமாலிருஞ்சோலையதே. 4.3.2.
மன்னு நரகன் தன்னைச்* சூழ்போகி வளைத்தெறிந்து*
கன்னி மகளிர் தம்மைக்* கவர்ந்த கடல்வண்ணன் மலை*
புன்னை செருந்தியொடு* புன வேங்கையும் கோங்கும் நின்று*
பொன்னரிமாலைகள்சூழ்* பொழில்மாலிருஞ்சோலையதே. 4.3.3.
மாவலி தன்னுடைய* மகன் வாணன் மகளிருந்த*
காவலைக் கட்டழித்த* தனிக்காளை கருதும்மலை*
கோவலர் கோவிந்தனைக்* குறமாதர்கள் பண்குறிஞ்சிப்*
பாவொலி பாடி நடம்பயில்* மாலிருஞ்சோலையதே. 4.3.4.
##பலபல நாழம் சொல்லிப்* பழித்த சிசுபாலன் தன்னை*
அலவலைமை தவிர்த்த* அழகன் அலங்காரன் மலை*
குலமலை கோலமலை* குளிர்மாமலை கொற்றமலை*
நிலமலை நீண்டமலை* திருமாலிருஞ்சோலையதே. (2) 4.3.5.
பாண்டவர் தம்முடைய* பாஞ்சாலி மறுக்கமெல்லாம்*
ஆண்டு அங்கு நூற்றுவர்தம்* பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை*
பாண்தகு வண்டினங்கள்* பண்கள் பாடி மதுப்பருக*
தோண்டலுடைய மலை* தொல்லைமாலிருஞ்சோலையதே. 4.3.6.
கனங் குழையாள் பொருட்டாக்* கணைபாரித்து* அரக்கர்தங்கள்-
இனம் கழுவேற்றுவித்த* எழில்தோள் எம் இராமன்மலை*
கனம்கொழி தெள்ளருவி* வந்துசூழ்ந்து கல் ஞாலமெல்லாம்*
இனம் குழுவாடும் மலை* எழில்மாலிருஞ்சோலையதே. 4.3.7.
எரிசிதறும் சரத்தால்* இலங்கையினை* தன்னுடைய-
வரிசிலை வாயில் பெய்து* வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த*
அரையன் அமரும் மலை* அமரரொடு கோனும்சென்று*
திரிசுடர் சூழும்மலை* திருமாலிருஞ்சோலையதே. 4.3.8.
கோட்டு மண் கொண்டிடந்து* குடங்கையில் மண் கொண்டளந்து*
மீட்டும் அதுண்டுமிழ்ந்து* விளையாடு விமலன் மலை*
ஈட்டிய பல்பொருள்கள்* எம்பிரானுக்கு அடியுறையென்று*
ஓட்டரும் தண் சிலம்பாறுடை* மாலிருஞ்சோலையதே. 4.3.9.
##ஆயிரம்தோள்பரப்பி* முடியாயிரம் மின்னிலக*
ஆயிரம் பைந்தலைய* அனந்த சயனன் ஆளும்மலை*
ஆயிரம் ஆறுகளும்* சுனைகள் பலவாயிரமும்*
ஆயிரம் பூம்பொழிலுமுடை* மாலிருஞ்சோலையதே. (2) 4.3.10.
## மாலிருஞ்சோலையென்னும்* மலையை உடைய மலையை*
நாலிரு மூர்த்தி தன்னை* நால் வேதக் கடலமுதை*
மேலிருங் கற்பகத்தை* வேதாந்த விழுப்பொருளில்*
மேலிருந்த விளக்கை* விட்டுசித்தன் விரித்தனவே. (2) 4.3.11.
நான்காம் திருமொழி
நாவகாரியம் சொல்லிலாதவர்* நாள்தொறும் விருந்தோம்புவார்*
தேவகாரியம்செய்து* வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர்*
மூவர் காரியமும் திருத்தும்* முதல்வனைச் சிந்தியாத* அப்-
பாவ காரிகளைப் படைத்தவன்* எங்ஙனம் படைத்தான் கொலோ! (2) 4.4.1.
குற்றமின்றிக் குணம் பெருக்கிக்* குருக்களுக்கு அனுகூலராய்*
செற்றமொன்றும் இலாத* வண் கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*
துற்றி ஏழ் உலகுண்ட* தூமணிவண்ணன் தன்னைத் தொழாதவர்*
பெற்ற தாயர் வயிற்றினைப்* பெருநோய் செய்வான் பிறந்தார்களே. 4.4.2.
வண்ணநல் மணியும் மரகதமும் அழுத்தி* நிழலெழும்-
திண்ணைசூழ்* திருக்கோட்டியூர்த்* திருமாலவன் திருநாமங்கள்*
எண்ணக் கண்ட விரல்களால்* இறைப்பொழுதும் எண்ணகிலாது போய்*
உண்ணக்கண்ட தம் ஊத்தை வாய்க்குக்* கவளம் உந்துகின்றார்களே. 4.4.3.
உரகமெல்லணையான் கையில்* உறை சங்கம்போல் மடவன்னங்கள்*
நிரை கணம் பரந்தேறும்* செங்கமல வயல் திருக்கோட்டியூர்*
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத* மானிட சாதியர்*
பருகு நீரும் உடுக்குங் கூறையும்* பாவம் செய்தனதாங் கொலோ! 4.4.4.
ஆமையின் முதுகத்திடைக் குதிகொண்டு* தூமலர் சாடிப்போய்*
தீமை செய்து இள வாளைகள்* விளையாடு நீர்த் திருக்கோட்டியூர்*
நேமிசேர் தடங்கையினானை* நினைப்பிலா வலி நெஞ்சுடை*
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப்* புல்லைத் திணிமினே. 4.4.5.
பூதம் ஐந்தொடு வேள்வியைந்து* புலன்களைந்து பொறிகளால்*
ஏதமொன்றுமிலாத* வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்
நாதனை நரசிங்கனை* நவின்றேத்துவார்கள் உழக்கிய*
பாத தூளி படுதலால்* இவ்வுலகம் பாக்கியம் செய்ததே. 4.4.6.
குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று* கூடியாடி விழாச்செய்து*
திருந்து நான்மறையோர்* இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்*
கருந்தட முகில்வண்ணனைக்* கடைக் கொண்டு கைதொழும் பத்தர்கள்*
இருந்த ஊரிலிருக்கும் மானிடர்* எத்தவங்கள் செய்தார்கொலோ! 4.4.7.
நளிர்ந்த சீலன் நயாசலன்* அபிமனதுங்கனை* நாள்தொறும்-
தெளிந்த செல்வனைச்* சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்*
குளிர்ந்துறைகின்ற கோவிந்தன்* குணம் பாடுவாருள்ள நாட்டினுள்*
விளைந்த தானியமும் * இராக்கதர் மீது கொள்ளகிலார்களே. 4.4.8.
கொம்பினார் பொழில்வாய்க்* குயிலினம் கோவிந்தன் குணம் பாடுசீர்*
செம்பொனார் மதிள்சூழ்* செழுங் கழனியுடைத் திருக்கோட்டியூர்*
நம்பனை நரசிங்கனை* நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்*
எம்பிரான் தன சின்னங்கள்* இவர் இவரென்று ஆசைகள் தீர்வனே. 4.4.9.
காசின் வாய்க் கரம் விற்கிலும்* கரவாது மாற்றிலி சோறிட்டு*
தேச வார்த்தை படைக்கும்* வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்*
கேசவா! புருடோத்தமா!* கிளர் சோதியாய்! குறளா! என்று*
பேசுவார் அடியார்கள்* எந்தம்மை விற்கவும் பெறுவார்களே. 4.4.10.
சீதநீர் புடைசூழ்* செழுங் கழனியுடைத் திருக்கோட்டியூர்*
ஆதியான் அடியாரையும்* அடிமையின்றித் திரிவாரையும்*
கோதில் பட்டர்பிரான்* குளிர் புதுவைமன் விட்டுசித்தன்சொல்*
ஏதமின்றி உரைப்பவர்* இருடீகேசனுக்காளரே. (2) 4.4.11.
ஐந்தாம் திருமொழி
ஆசைவாய்ச் சென்ற சிந்தையராகி* அன்னை அத்தன் என் புத்திரர் பூமி*
வாசவார் குழலாள் என்று மயங்கி* மாளுமெல்லைக் கண்வாய் திறவாதே*
கேசவா! புருடோத்தமா! என்றும்* கேழலாகிய கேடிலீ! என்றும்*
பேசுவார் அவர் எய்தும் பெருமை* பேசுவான் புகில் நம் பரமன்றே. (2) 4.5.1.
சீயினால் செறிந்தேறிய புண்மேல்* செற்றல் ஏறிக் குழம்பிருந்து* எங்கும்-
ஈயினால் அரிப்புண்டு மயங்கி* எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்*
வாயினால் நமோநாரணா என்று* மத்தகத்திடைக் கைகளைக்கூப்பி*
போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்* பிணைக்கொடுக்கிலும் போகவொட்டாரே.
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்* சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து*
ஆர் வினவிலும் வாய் திறவாதே* அந்தகாலம் அடைவதன் முன்னம்*
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து* மாதவனென்னும் தெய்வத்தை நாட்டி*
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு* அரவ தண்டத்தில் உய்யலுமாமே. 4.5.3.
மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து* மேல் மிடற்றினை உள் எழ வாங்கி*
காலும் கையும் விதிர் விதிர்த்தேறிக்* கண் உறக்கம் அது ஆவதன்முன்னம்*
மூலமாகிய ஒற்றை எழுத்தை* மூன்றுமாத்திரை உள் எழ வாங்கி*
வேலை வண்ணனை மேவுதிராகில்* விண்ணகத்தினில் மேவலுமாமே. 4.5.4.
மடிவழி வந்து நீர் புலன் சோர* வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே*
கடைவழி வாரக் கண்டம் அடைப்பக்* கண்ணுறக்கம் அது ஆவதன் முன்னம்*
தொடை வழி உம்மை நாய்கள்கவரா* சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்*
இடைவழியில் நீர் கூறையும் இழவீர்* இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே. 4.5.5.
அங்கம்விட்டு அவை ஐந்தும் அகற்றி* ஆவி மூக்கினில் சோதித்த பின்னை*
சங்கம் விட்டவர் கையை மறித்துப்* பையவே தலை சாய்ப்பதன் முன்னம்*
வங்கம் விட்டு உலவும் கடற்பள்ளி மாயனை* மதுசூதனனை மார்பில்-
தங்க விட்டு வைத்து* ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு * என்றும் சாதிக்கலாமே. 4.5.6.
தென்னவன் தமர் செப்பமிலாதார்* சே அதக்குவார் போலப்புகுந்து*
பின்னும் வன்கயிற்றால் பிணித்து எற்றிப்* பின் முன்னாக இழுப்பதன் முன்னம்*
இன்னவன் இனையான் என்றுசொல்லி* எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி*
மன்னவன் மதுசூதனன் என்பார்* வானகத்து மன்றாடிகள் தாமே. 4.5.7.
கூடிக்கூடி உற்றார்கள் இருந்து* குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து*
பாடிப் பாடி ஓர் பாடையிலிட்டு* நரிப் படைக்கு ஒரு பாகுடம்போலே*
கோடி மூடியெடுப்பதன் முன்னம்* கௌத்துவமுடைக் கோவிந்தனோடு*
கூடியாடிய உள்ளத்தர் ஆனால்* குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே. 4.5.8.
வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப* வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற*
தாய் ஒருபக்கம் தந்தை ஒருபக்கம்* தாரமும் ஒருபக்கம் அலற்ற*
தீ ஓருபக்கம் சேர்வதன் முன்னம்* செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற-
மாய்* ஒருபக்கம் நிற்க வல்லார்க்கு* அரவ தண்டத்தில் உய்யலுமாமே. 4.5.9.
செத்துப் போவதோர் போது நினைந்து* செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்*
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*
சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்*
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால்மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே. (2) 4.5.10.
ஆறாம் திருமொழி
காசும் கரை உடைக் கூறைக்கும்* அங்கோர் கற்றைக்கும்-
ஆசையினால்* அங்கு அவத்தப் பேரிடும்* ஆதர்காள்!*
கேசவன் பேரிட்டு* நீங்கள் தேனித்து இருமினோ*
நாயகன் நாரணன்* தம் அன்னை நரகம்புகாள். (2) 4.6.1.
அங்கொருகூறை* அரைக்கு உடுப்பதன் ஆசையால்*
மங்கிய மானிட சாதியின்* பேரிடும் ஆதர்காள்!*
செங்கணெடுமால்!* சிரீதரா! என்று அழைத்தக் கால்*
நங்கைகாள்! நாரணன்* தம் அன்னை நரகம்புகாள். 4.6.2.
உச்சியில் எண்ணெயும்* சுட்டியும் வளையும் உகந்து*
எச்சம் பொலிந்தீர்காள்!* என் செய்வான் பிறர் பேர் இட்டீர்?*
பிச்சை புக்கு ஆகிலும்* எம்பிரான் திருநாமமே-
நச்சுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள். 4.6.3.
மானிட சாதியில் தோன்றிற்று* ஓர் மானிடசாதியை*
மானிட சாதியின் பேரிட்டால்* மறுமைக்கில்லை*
வானுடை மாதவா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நானுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள். 4.6.4.
மலமுடை ஊத்தையில் தோன்றிற்று* ஓர் மல ஊத்தையை*
மலமுடை ஊத்தையின் பேரிட்டால்* மறுமைக்கில்லை*
குலமுடைக் கோவிந்தா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நலமுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள். 4.6.5.
நாடும் நகரும் அறிய* மானிடப் பேரிட்டு*
கூடி அழுங்கிக்* குழியில் வீழ்ந்து வழுக்காதே*
சாடிறப் பாய்ந்த தலைவா!* தாமோதரா! என்று-
நாடுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள். 4.6.6.
மண்ணில் பிறந்து மண்ணாகும்* மானிடப் பேரிட்டு* அங்கு-
எண்ணமொன்று எண்ணியிருக்கும்* ஏழை மனிசர்காள்!*
கண்ணுக்கினிய* கருமுகில் வண்ணன் நாமமே-
நண்ணுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள். 4.6.7.
நம்பி பிம்பியென்று* நாட்டு மானிடப் பேரிட்டால்*
நம்பும் பிம்புமெல்லாம்* நாலுநாளில் அழுங்கிப்போம்*
செம்பெருந் தாமரைக் கண்ணன்* பேரிட்டு அழைத்தக்கால்*
நம்பிகாள்! நாரணன்* தம் அன்னை நரகம்புகாள். 4.6.8.
ஊத்தைக் குழியில்* அமுதம் பாய்வதுபோல்* உங்கள்-
மூத்திரப் பிள்ளையை* என் முகில்வண்ணன் பேரிட்டு*
கோத்துக் குழைத்துக்* குணாலம் ஆடித் திரிமினோ*
நாத்தகு நாரணன்* தம் அன்னை நரகம்புகாள். 4.6.9.
சீரணி மால்* திருநாமமே இடத் தேற்றிய*
வீரணி தொல் புகழ்* விட்டுசித்தன் விரித்த*
ஓர் அணி ஒண் தமிழ்* ஒன்பதோடொன்றும் வல்லவர்*
பேரணி வைகுந்தத்து* என்றும் பேணியிருப்பரே. (2) 4.6.10.
ஏழாம் திருமொழி
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த* எம் தாசரதிபோய்*
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட* எம் புருடோத்தமன் இருக்கை*
கங்கை கங்கையென்ற வாசகத்தாலே* கடுவினை களைந்திட கிற்கும்*
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற* கண்டமென்னும் கடிநகரே. (2) 4.7.1.
சலம்பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச்* சந்திரன் வெங்கதிர் அஞ்ச*
மலர்ந்து எழுந்து அணவு மணிவண்ண உருவின்* மால் புருடோத்தமன் வாழ்வு*
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும்* நாரணன் பாதத் துழாயும்*
கலந்திழி புனலால் புகர்படு கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே. 4.7.2.
அதிர் முகமுடைய வலம்புரி குமிழ்த்தி* அழல் உமிழ் ஆழி கொண்டெறிந்து* அங்கு-
எதிர்முக அசுரர் தலைகளை இடறும்* எம் புருடோத்தமன் இருக்கை*
சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*
கதிர்முக மணிகொண்டு எழி புனல் கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே. 4.7.3.
இமையவர் இறுமாந்திருந்து அரசாள* ஏற்று வந்தெதிர் பொருசேனை*
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்* நம் புருடோத்தமன் நகர்தான்*
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகிரைத்தாட*
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே. 4.7.4.
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்* ஒண் சுடராழியும் சங்கும்*
மழுவொடு வாளும் படைக்கலம் உடைய* மால் புருடோத்தமன் வாழ்வு*
எழுமையும் கூடி ஈண்டிய பாவம்* இறைப் பொழுது அளவினில் எல்லாம்*
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே. 4.7.5.
தலைப் பெய்து குமுறிச் சலம் பொதி மேகம்* சலசல பொழிந்திடக்கண்டு*
மலைப் பெருங்குடையால் மறைத்தவன் மதுரை* மால் புருடோத்தமன் வாழ்வு*
அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர்* அவபிரதம் குடைந்தாட*
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே. 4.7.6.
விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி* மேலிருந்தவன் தலைசாடி*
மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த* மால் புருடோத்தமன் வாழ்வு*
அற்புதமுடைய ஐராவத மதமும்* அவர் இளம்படியர் ஒண்சாந்தும்*
கற்பக மலரும் கலந்திழி கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே. 4.7.7.
திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து* தன் மைத்துனன்மார்க்காய்*
அரசனை அவிய அரசினை அருளும்* அரி புருடோத்தமன் அமர்வு*
நிரை நிரையாக நெடியன யூபம்* நிரந்தரம் ஒழுக்கு விட்டு* இரண்டு-
கரைபுரை வேள்விப் புகை கமழ் கங்கை* கண்டமென்னும் கடிநகரே. 4.7.8.
##வடதிசை மதுரை சாளக்கிராமம்* வைகுந்தம் துவரை அயோத்தி*
இடமுடை வதரி இட வகையுடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்* தலைப் பற்றிக் கரை மரம்சாடி*
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே. (2) 4.7.9.
##மூன்றெழுத்து அதனை மூன்றெழுத்து அதனால்* மூன்றெழுத்தாக்கி* மூன்றெழுத்தை-
ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி* மூன்றினில் மூன்று உருவானான்*
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே.(2) 4.7.10.
பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து* உறை புருடோத்தமனடிமேல்*
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்* விட்டுசித்தன் விருப்புற்று*
தங்கிய அன்பால் செய்த தமிழ்மாலை* தங்கிய நாவுடையார்க்கு*
கங்கையில் திருமால் கழலிணைக்கீழே* குளித்திருந்த கணக்காமே. (2) 4.7.11.
எட்டாம் திருமொழி
மாதவத்தோன் புத்திரன்போய்* மறிகடல்வாய் மாண்டானை*
ஓதுவித்த தக்கணையா* உரு உருவே கொடுத்தானூர்*
தோத வத்தித் தூய் மறையோர்* துறை படியத் துளும்பி எங்கும்*
போதில் வைத்த தேன் சொரியும்* புனலரங்கம் என்பதுவே. (2) 4.8.1.
பிறப்பகத்தே மாண்டொழிந்த* பிள்ளைகளை நால்வரையும்*
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து* ஒருப்படுத்த உறைப்பனூர்*
மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார்* வரு விருந்தை அளித்திருப்பார்*
சிறப்புடைய மறையவர் வாழ்* திருவரங்கம் என்பதுவே. 4.8.2.
மருமகன் தன் சந்ததியை* உயிர்மீட்டு மைத்துனன்மார்*
உரு மகத்தே வீழாமே* குருமுகமாய்க் காத்தானூர்*
திருமுகமாய்ச் செங்கமலம்* திரு நிறமாய்க் கருங்குவளை*
பொருமுகமாய் நின்றலரும்* புனலரங்கம் என்பதுவே. 4.8.3.
கூன் தொழுத்தை சிதகுரைப்பக்* கொடியவள் வாய்க் கடிய சொல்கேட்டு*
ஈன்றெடுத்த தாயரையும்* இராச்சியமும் ஆங்கொழிய*
கான் தொடுத்த நெறி போகிக்* கண்டகரைக் களைந்தானூர்*
தேன் தொடுத்த மலர்ச்சோலைத்* திருவரங்கம் என்பதுவே. 4.8.4.
பெரு வரங்கள் அவை பற்றிப்* பிழக்குடைய இராவணனை*
உருவரங்கப் பொருதழித்து* இவ்வுலகினைக் கண் பெறுத்தானூர்*
குருவரும்பக் கோங்கு அலரக்* குயில்கூவும் குளிர்பொழில்சூழ்*
திருவரங்கம் என்பதுவே* என்திருமால் சேர்விடமே. 4.8.5.
கீழுலகில் அசுரர்களைக்* கிழங்கிருந்து கிளராமே*
ஆழிவிடுத்து அவருடைய* கருவழித்த வழிப்பனூர்*
தாழை மடல் ஊடு உரிஞ்சித்* தவளவண்ணப் பொடியணிந்து*
யாழின் இசை வண்டினங்கள்* ஆளம் வைக்கும் அரங்கமே. 4.8.6.
கொழுப்புடைய செழுங்குருதி* கொழித்து இழிந்து குமிழ்த்தெறிய*
பிழக்குடைய அசுரர்களைப்* பிணம் படுத்த பெருமானூர்*
தழுப்பரிய சந்தனங்கள்* தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு*
தெழிப்புடைய காவிரி வந்து* அடிதொழும் சீரரங்கமே. 4.8.7.
வல்லெயிற்றுக் கேழலுமாய்* வாளெயிற்றுச் சீயமுமாய்*
எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானூர்*
எல்லியம்போது இருஞ்சிறை வண்டு* எம்பெருமான் குணம்பாடி*
மல்லிகை வெண்சங்கூதும்* மதிளரங்கம் என்பதுவே. 4.8.8.
குன்றாடு கொழு முகில்போல்* குவளைகள்போல் குரைகடல்போல்*
நின்றாடு கண மயில்போல்* நிறமுடைய நெடுமாலூர்*
குன்றூடு பொழில் நுழைந்து* கொடியிடையார் முலை அணவி*
மன்றூடு தென்றலுமாம்* மதிளரங்கம் என்பதுவே. 4.8.9.
பருவரங்கள் அவைபற்றிப்* படையாலித்து எழுந்தானை*
செருவரங்கப் பொருது அழித்த* திருவாளன் திருப்பதிமேல்*
திருவரங்கத் தமிழ்மாலை* விட்டுசித்தன் விரித்தனகொண்டு*
இருவரங்கம் எரித்தானை* ஏத்தவல்லார் அடியோமே. (2) 4.8.10.
ஒன்பதாம் திருமொழி
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்* வானோர்வாழ*
செருவுடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட* திருமால்கோயில்*
திருவடிதன் திருவுருவும்* திருமங்கைமலர் கண்ணும் காட்டி நின்று*
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட* ஓ சலிக்கும் ஒளியரங்கமே. (2) 4.9.1.
##தன்னடியார் திறத்தகத்துத்* தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்*
என்னடியார் அதுசெய்யார்* செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்*
மன்னுடைய விபீடணற்கா* மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண்வைத்த*
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும்* மற்றொருவர்க்கு ஆளாவரே? (2) 4.9.2.
கருளுடைய பொழில் மருதும்* கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்*
உருளுடைய சகடரையும் மல்லரையும்* உடைய விட்டு ஓசைகேட்டான்*
இருளகற்றும் எறி கதிரோன்* மண்டலத் தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி*
அருள் கொடுத்திட்டு அடியவரை* ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே. 4.9.3.
பதினாறாம் ஆயிரவர்* தேவிமார் பணிசெய்ய துவரை என்னும்*
அதில் நாயகராகி வீற்றிருந்த* மணவாளர் மன்னுகோயில்*
புதுநாண் மலர்க்கமலம்* எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்*
பொதுநாயகம் பாவித்து* இருமாந்து பொன் சாய்க்கும் புனலரங்கமே. 4.9.4.
ஆமையாய்க் கங்கையாய்* ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்*
நான்முகனாய் நான்மறையாய்* வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான்*
சேமமுடை நாரதனார்* சென்றுசென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்*
பூமருவிப் புள்ளினங்கள்* புள்ளரையன் புகழ் குழறும் புனலரங்கமே. 4.9.5.
மைத்துனன்மார் காதலியை* மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி*
உத்தரைதன் சிறுவனையும் உய்யக்கொண்ட* உயிராளன் உறையும்கோயில்*
பத்தர்களும் பகவர்களும்* பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும்*
சித்தர்களும் தொழுது இறைஞ்சத்* திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே. 4.9.6.
குறட் பிரமசாரியாய்* மாவலியைக் குறும்பு அதக்கி அரசுவாங்கி*
இறைப் பொழிதில் பாதாளம் கலவிருக்கை* கொடுத்துகந்த எம்மான்கோயில்*
எறிப்புடைய மணிவரைமேல்* இள ஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்*
சிறப்புடைய பணங்கள் மிசைச்* செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே. 4.9.7.
உரம்பற்றி இரணியனை* உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்கவூன்றி*
சிரம்பற்றி முடி இடியக் கண் பிதுங்க* வாய் அலரத் தெழித்தான் கோயில்*
உரம் பெற்ற மலர்க்கமலம்* உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட*
வரம்புற்ற கதிர்ச் செந்நெல்* தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண்ணரங்கமே. 4.9.8.
தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்க்* கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில்*
சேவலொடு பெடையன்னம்* செங்கமல மலரேறி ஊசலாடி*
பூவணைமேல் துதைந்து எழு* செம்பொடி ஆடி விளையாடும் புனலரங்கமே. 4.9.9.
செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்* செருச்செய்யும் நாந்தகமென்னும் ஒருவாளன்*
மறையாளன் ஓடாத படையாளன்* விழுக்கையாளன்*
இரவாளன் பகலாளன் என்னை ஆளன்* ஏழுலகப் பெரும் புரவாளன்*
திருவாளன் இனிதாகத்* திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே. 4.9.10.
கைந் நாகத்து இடர் கடிந்த* கனலாழிப் படை உடையான் கருதும்கோயில்*
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற* திருவரங்கம் திருப்பதியின்மேல்*
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன்* விரித்த தமிழ் உரைக்க வல்லார்*
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக் கீழ்* இணை பிரியாது இருப்பர் தாமே. 4.9.11.
பத்தாம் திருமொழி
துப்புடையாரை அடைவதெல்லாம்* சோர்விடத்துத் துணையாவரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்* ஆனைக்கு நீ அருள்செய்தமையால்*
எய்ப்பு என்னை வந்து நலியும்போது* அங்குஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.1.
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்* சங்கொடு சக்கரம் ஏந்தினானே!*
நாமடித்து என்னை அனேக தண்டம்* செய்வதா நிற்பர் நமன்தமர்கள்*
போமிடத்து உன்திறத்து எத்தனையும்* புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை*
ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.2.
எல்லையில் வாசல் குறுகச்சென்றால்* எற்றி நமன்தமர் பற்றும்போது*
நில்லுமின் என்னும் உபாயமில்லை* நேமியும் சங்கமும் ஏந்தினானே!*
சொல்லலாம்போதே உன் நாமமெல்லாம்* சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்*
அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.3.
ஒற்றைவிடையனும் நான்முகனும்* உன்னையறியாப் பெருமையோனே!*
முற்றஉலகெல்லாம் நீயேயாகி* மூன்றெழுத்தாய முதல்வனேயா!*
அற்றது வாணாள் இவர்க்கு என்றெண்ணி* அஞ்சநமன்தமர் பற்றலுற்ற*
அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.4.
பையரவினணைப் பாற்கடலுள்* பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி!*
உய்யஉலகு படைக்கவேண்டி* உந்தியில் தோற்றினாய் நான்முகனை*
வையமனிசரைப் பொய்யென்றெண்ணிக்* காலனையும் உடனே படைத்தாய்*
ஐய! இனி என்னைக் காக்க வேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.5.
தண்ணனவில்லை நமன்தமர்கள்* சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்*
மண்ணொடு நீரும் எரியும் காலும்* மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*
எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம்* எண்ணினேன்,என்னைக் குறிக்கொண்டு என்றும்*
அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்*அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.6.
செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற* தேவர்கள்நாயகனே! எம்மானே!*
எஞ்சலில் என்னுடை இன்னமுதே!* ஏழுலகுமுடையாய்! என்னப்பா!*
வஞ்சவுருவின் நமன்தமர்கள்* வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது*
அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.7.
நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்* நமன்தமர்பற்றி நலிந்திட்டு*
இந்த ஊனேபுகேயென்று மோதும்போது*அங்கேதும் நான்உன்னை நினைக்கமாட்டேன்*
வானேய் வானவர் தங்கள் ஈசா!* மதுரைப் பிறந்த மாமாயனே!* என்-
ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.8.
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!* கோநிரை மேய்த்தவனே! எம்மானே!*
அன்றுமுதல் இன்று அறுதியா* ஆதியஞ்சோதி மறந்தறியேன்*
நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது*
அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.9.
மாயவனை மதுசூதனனை* மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்களேற்றினை அச்சுதனை* அரங்கத்தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்* விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனராகி வல்லார்* தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2) 4.10.10.
ஐந்தாம் பத்து
முதல் திருமொழி
வாக்குத் தூய்மை இலாமையினாலே* மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்*
நாக்கு நின்னையல்லால் அறியாது* நான் அதஞ்சுவன் என் வசமன்று*
மூர்க்குப் பேசுகின்றான் இவனென்று* முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்*
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்* காரணா! கருளக் கொடியானே! (2) 5.1.1.
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்* சங்கு சக்கரம் ஏந்து கையனே!*
பிழைப்பர் ஆகிலும் தம்மடியார் சொல்* பொறுப்பது பெரியோர் கடனன்றே*
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்* வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது*
உழைக்கு ஓர் புள்ளி மிகையன்று கண்டாய்* ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே! 5.1.2.
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்* நாரணா! என்னும் இத்தனை அல்லால்*
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்* புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன்* ஓவாதே நமோநாரணா! என்பன்*
வன்மையாவது உன் கோயிலில்வாழும்* வைஷ்ணவன் என்னும் வன்மை கண்டாயே.5.1.3.
நெடுமையால் உலகேழும் அளந்தாய்!* நின்மலா! நெடியாய்! அடியேனைக்*
குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா* கூறை சோறு இவை வேண்டுவதில்லை*
அடிமையென்னும் அக் கோயின்மையாலே* அங்கங்கே அவை போதரும் கண்டாய்*
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை* கோத்தவன் தளை கோள் விடுத்தானே!4.
தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை* துடவையும் கிணறும் இவையெல்லாம்*
வாட்டமின்றி உன்பொன்னடிக் கீழே* வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது* நச்சுவார் பலர் கேழல் ஒன்றாகி*
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே!* குஞ்சரம் வீழக் கொம்பொசித்தானே! 5.1.5.
கண்ணா! நான்முகனைப் படைத்தானே!* காரணா! கரியாய்! அடியேன் நான்*
உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை* ஓவாதே நமோநாரணா என்று*
எண்ணா நாளும் இருக்கு எசுர் சாம வேத* நாண்மலர் கொண்டு உன்பாதம்-
நண்ணா நாள்* அவை தத்துறும் ஆகில்* அன்று எனக்கு அவை பட்டினிநாளே. 5.1.6.
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒருபாம்பை* மெத்தையாக விரித்து* அதன்மேலே-
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்* காணலாங்கொல் என்ற ஆசையினாலே*
உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி* உரோம கூபங்களாய்* கண்ண நீர்கள்-
துள்ளம்சோரத் துயிலணை கொள்ளேன்* சொல்லாய் யான் உன்னைத் தத்துறும் ஆறே. 5.1.7.
வண்ணமால் வரையே குடையாக* மாரி காத்தவனே! மதுசூதா!*
கண்ணனே! கரிகோள் விடுத்தானே!* காரணா! களிறட்ட பிரானே!*
எண்ணுவார் இடரைக் களைவானே!* ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே!*
நண்ணி நான் உன்னை நாள்தொறும் ஏத்தும்* நன்மையே அருள்செய் எம்பிரானே! 5.1.8.
நம்பனே! நவின்று ஏத்த வல்லார்கள்* நாதனே! நரசிங்கமது ஆனாய்!*
உம்பர்கோன் உலகேழும் அளந்தாய்* ஊழி ஆயினாய்! ஆழி முன்னேந்தி*
கம்ப மா கரிகோள் விடுத்தானே!* காரணா! கடலைக் கடைந்தானே!*
எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே. 5.1.9.
காமர் தாதை கருதலர் சிங்கம்* காண இனிய கருங்குழல் குட்டன்*
வாமனன் என் மரதக வண்ணன்* மாதவன் மதுசூதனன் தன்னை*
சேம நன்கமரும் புதுவையர்கோன்* விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்*
நாமமென்று நவின்றுரைப்பார்கள்* நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே. (2) 5.1.10.
இரண்டாம் திருமொழி
நெய்க் குடத்தைப்பற்றி* ஏறும் எறும்புகள்போல் நிரந்து* எங்கும்-
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்!* காலம் பெற உய்யப்போமின்*
மெய்க் கொண்டு வந்து புகுந்து* வேதப்பிரானார் கிடந்தார்*
பைக் கொண்ட பாம்பணையோடும்* பண்டன்று பட்டினம் காப்பே. (2) 5.2.1.
சித்திரகுத்தன் எழுத்தால்* தென் புலக்கோன் பொறியொற்றி*
வைத்த இலச்சினை மாற்றித்* தூதுவர் ஓடி ஒளித்தார்*
முத்துத் திரைக்கடற் சேர்ப்பன்* மூதறிவாளர் முதல்வன்*
பத்தர்க்கு அமுதன் அடியேன்* பண்டன்று பட்டினம் காப்பே. 5.2.2.
வயிற்றில் தொழுவைப் பிரித்து* வன்புலச் சேவை அதக்கி*
கயிற்றும் அக்காணி கழித்துக்* காலிடைப் பாசம்கழற்றி*
எயிற்றிடை மண் கொண்ட எந்தை* இராப்பகல் ஓதுவித்து* என்னைப் –
பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்* பண்டன்று பட்டினம் காப்பே. 5.2.3.
மங்கிய வல்வினை நோய்காள்!* உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்*
இங்குப் புகேன்மின் புகேன்மின்* எளிதன்று கண்டீர் புகேன்மின்*
சிங்கப்பிரான் அவன் எம்மான்* சேரும் திருக்கோயில் கண்டீர்*
பங்கப்படாது உய்யப்போமின்* பண்டன்று பட்டினம் காப்பே. 5.2.4.
மாணிக் குறளுருவாய* மாயனை என் மனத்துள்ளே*
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன்* பிறிதின்றி *
மாணிக்கப் பண்டாரம் கண்டீர்* வலிவன் குறும்பர்கள் உள்ளÖர்!*
பாணிக்க வேண்டா நடமின்* பண்டன்று பட்டினம் காப்பே. 5.2.5.
உற்றவுறு பிணிநோய்காள்!* உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்*
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்* பேணும் திருக்கோயில் கண்டீர்*
அற்றம் உரைக்கின்றேன்* இன்னம் ஆழ் வினைகாள்!* உமக்கு இங்கு ஓர்-
பற்றில்லை கண்டீர் நடமின்* பண்டன்று பட்டினம் காப்பே. 5.2.6.
கொங்கைச் சிறுவரை என்னும்* பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி*
அங்கோர் முழையினில் புக்கிட்டு* அழுந்திக் கிடந்து உழல்வேனை*
வங்கக் கடல்வண்ணன் அம்மான்* வல் வினையாயின மாற்றி*
பங்கப்படா வண்ணம் செய்தான்* பண்டன்று பட்டினம் காப்பே. 5.2.7.
ஏதங்கள் ஆயினவெல்லாம்* இறங்கல் இடுவித்து* என்னுள்ளே-
பீதகவாடைப் பிரானார்* பிரம குருவாகி வந்து*
போதில் கமல வன்னெஞ்சம்* புகுந்தும் என் சென்னித்திடரில்*
பாத இலச்சினை வைத்தார்* பண்டன்று பட்டினம் காப்பே. 5.2.8.
உறகல் உறகல் உறகல்* ஒண்சுடராழியே! சங்கே!*
அறவெறி நாந்தக வாளே!* அழகிய சார்ங்கமே! தண்டே!*
இறவு படாமலிருந்த* எண்மர் உலோக பாலீர்காள்!*
பறவை அரையா! உறகல்* பள்ளியறைக் குறிக்கோண்மின். (2) 5.2.9.
அரவத்து அமளியினோடும்* அழகிய பாற்கடலோடும்*
அரவிந்தப் பாவையும் தானும்* அகம்படி வந்து புகுந்து*
பரவைத் திரை பல மோதப்* பள்ளி கொள்கின்ற பிரானை*
பரவுகின்றான் விட்டுசித்தன்* பட்டினம் காவற் பொருட்டே. (2) 5.2.10.
மூன்றாம் திருமொழி
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த* வலையை அறப் பறித்து*
புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன்* இனிப் போக விடுவதுண்டோ?*
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத* இழந்தவள் தன்வயிற்றில்*
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்! (2) 5.3.1.
வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன்* உன்தன் இந்திர ஞாலங்களால்*
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்* நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை*
அளித்தெங்கும் நாடும் நகரமும்* தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று*
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத்* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.2.
##உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன்,* இனிப்போய் ஒருவன்-
தனக்குப் பணிந்து* கடைத்தலை நிற்கை* நின்சாயை அழிவு கண்டாய்*
புனத்தினை கிள்ளிப் புது அவி காட்டி* உன் பொன்னடி வாழ்கவென்று*
இனக் குறவர் புதியது உண்ணும்* எழில் திருமாலிருஞ்சோலை எந்தாய்! (2) 5.3.3.
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு* அங்கோர் நிழலில்லை நீரில்லை* உன்-
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம்* நான் எங்கும் காண்கின்றிலேன்*
தூதுசென்றாய்! குரு பாண்டவர்க்காய்* அங்கோர் பொய் சுற்றம் பேசிச்சென்று*
பேதஞ்செய்து எங்கும் பிணம் படைத்தாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.4.
காலும் எழா கண்ண நீரும் நில்லா* உடல் சோர்ந்து நடுங்கி* குரல்-
மேலும் எழா மயிர்க்கூச்சும் அறா* எனதோள்களும் வீழ்வொழியா*
மால் உகளா நிற்கும் என் மனனே!* உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்*
சேலுகளா நிற்கும் நீள்சுனை சூழ்* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.5.
எருத்துக் கொடியுடையானும்* பிரமனும் இந்திரனும்* மற்றும்-
ஒருத்தரும் இப் பிறவியென்னும் நோய்க்கு* மருந்து அறிவாருமில்லை*
மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா!* மறு பிறவி தவிரத்-
திருத்தி* உன்கோயில் கடைப்புகப் பெய்* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.6.
அக்கரையென்னு மனத்தக் கடலுள் அழுந்தி* உன் பேர் அருளால்*
இக் கரையேறி இளைத்திருந்தேனை* அஞ்சலென்று கை கவியாய்*
சக்கரமும் தடக்கைகளும்* கண்களும் பீதகவாடையொடும்*
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.7.
எத்தனை காலமும் எத்தனையூழியும்* இன்றொடு நாளையென்றே*
இத்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன்* இனி உன்னைப் போகலொட்டேன்*
மைத்துனன்மார்களை வாழ்வித்து* மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்!*
சித்தம் நின்பாலது அறிதி அன்றே* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.8.
அன்று வயிற்றில் கிடந்திருந்தே* அடிமை செய்யல் உற்றிருப்பன்*
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன்* இனிப்போக விடுவதுண்டே?*
சென்று அங்கு வாணனை ஆயிரந்தோளும்* திருச் சக்கரம் அதனால்*
தென்றித் திசைதிசை வீழச் செற்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.9.
சென்று உலகம் குடைந்தாடும் சுனைத்* திருமாலிருஞ்சோலை தன்னுள்-
நின்றபிரான்* அடிமேல் அடிமைத் திறம்* நேர்பட விண்ணப்பஞ்செய்*
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும்* புதுவைக்கோன் விட்டுசித்தன்*
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார்* உலகமளந்தான் தமரே. (2) 5.3.10.
நாலாம் திருமொழி
சென்னியோங்கு* தண்திருவேங்கடமுடையாய்!* உலகு-
தன்னை வாழநின்றநம்பீ!* தாமோதரா! சதிரா!*
என்னையும் என்னுடைமையையும்* உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு*
நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2) 5.4.1.
பறவையேறு பரம்புருடா!* நீஎன்னைக் கைக்கொண்டபின்*
பிறவியென்னும் கடலும்வற்றிப்* பெரும்பதம் ஆகின்றதால்*
இறவு செய்யும் பாவக்காடு* தீக்கொளÖஇ வேகின்றதால்*
அறிவையென்னும் அமுதவாறு* தலைப்பற்றி வாய்க்கொண்டதே. 5.4.2.
எம்மனா! என்குலதெய்வமே!* என்னுடையநாயகனே!*
நின் உளேனாய்ப் பெற்றநன்மை* இவ்வுலகினில்ஆர் பெறுவார்?*
நம்மன்போலே வீழ்த்தமுக்கும்* நாட்டிலுள்ள பாவமெல்லாம்*
சும்மெனாதே கைவிட்டோடித்* தூறுகள் பாய்ந்தனவே. 5.4.3.
கடல் கடைந்து அமுதம் கொண்டு* கலசத்தை நிறைத்தாற் போல்*
உடலுருகி வாய்திறந்து* மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்*
கொடுமை செய்யும் கூற்றமும்* என்கோல் ஆடி குறுகப்பெறா*
தடவரைத்தோள் சக்கரபாணீ!* சார்ங்கவிற் சேவகனே! 5.4.4.
##பொன்னைக்கொண்டு உரைகல்மீதே* நிறமெழ உரைத்தாற்போல்*
உன்னைக்கொண்டு என்நாவகம் பால்* மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்*
உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்* என்னையும்உன்னிலிட்டேன்*
என்னப்பா! என்னிருடீகேசா!* என்னுயிர்க் காவலனே! (2) 5.4.5.
உன்னுடைய விக்கிரமம்* ஒன்றொழியாமல் எல்லாம்*
என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்*
மன்னடங்க மழுவலங்கைக் கொண்ட* இராமநம்பீ!*
என்னிடைவந்து எம்பெருமான்!* இனியெங்குப்போகின்றதே? 5.4.6.
##பருப் பதத்துக் கயல்பொறித்த* பாண்டியர்குலபதிபோல்*
திருப்பொலிந்தசேவடி* என் சென்னியின்மேல்பொறித்தாய்*
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்று உன்வாசகமே*
உருப்பொலிந்த நாவினேனை* உனக்கு உரித்தாகினையே. (2) 5.4.7.
அனந்தன்பாலும் கருடன்பாலும்* ஐதுநொய்தாக வைத்து* என்-
மனந்தனுள்ளே வந்து வைகி* வாழச் செய்தாய் எம்பிரான்!*
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்* கண்கள் அசும்பொழுக*
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்* நேமிநெடியவனே! 5.4.8.
பனிக்கடலில் பள்ளிகோளைப்* பழகவிட்டு* ஓடிவந்துஎன்-
மனக்கடலில் வாழவல்ல* மாய மணாளநம்பீ!*
தனிக்கடலே! தனிச்சுடரே!* தனியுலகே என்றென்று*
உனக்கிடமாயிருக்க* என்னை உனக்கு உரித்தாக்கினையே. 5.4.9.
##தடவரை வாய் மிளிர்ந்து மின்னும்* தவள நெடுங்கொடிபோல்*
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே* தோன்றும் என்சோதிநம்பி!*
வடதடமும் வைகுந்தமும்* மதிள் துவராபதியும்*
இடவகைகள் இகழ்ந்திட்டு* என்பால் இடவகை கொண்டனையே. (2) 5.4.10.
வேயர் தங்கள் குலத்துதித்த* விட்டுசித்தன் மனத்தே*
கோயில்கொண்ட கோவலனைக்* கொழுங்குளிர் முகில்வண்ணனை*
ஆயரேற்றை அமரர்கோவை* அந்தணர்தம் அமுதத்தினை*
சாயைபோலப் பாடவல்லார்* தாமும் அணுக்கர்களே. (2) 5.4.11.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

