ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – இரண்டாம் பத்து – ஆறாம் திருமொழி
| 1098 | நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு, வானவரைப் பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார், மருவினிய தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை, எண்ணாதே யிருப்பாரை யிறைப்பொழுது மெண்ணோமே. |
6.1 |
| 1099 | பார்வண்ண மடமங்கை பனிநன்மா மலர்க்கிழத்தி, நீர்வண்ணன் மார்வகத்தி லிருக்கையைமுன் நினைந்தவனூர், கார்வண்ண முதுமுந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம், ஆரெண்ணும் நெஞ்சுடையா ரவரெம்மை யாள்வாரே. |
6.2 |
| 1100 | ஏனத்தி னுருவாகி நிலமங்கை யெழில்கொண்டான், வானத்தி லவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள, கானத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற, ஞானத்தி னொளியுருவை நினைவாரென் நாயகரே. |
6.3 |
| 1101 | விண்டாரை வென்றாவி விலங்குண்ண, மெல்லியலார் கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக் கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை, கொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே. |
6.4 |
| 1102 | பிச்சச் சிறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர், விச்சைக் கிறையென்னு மவ்விறையைப் பணியாதே, கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம், நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே. |
6.5 |
| 1103 | புலன்கொள்நிதிக் குவையோடு புழைக்கைமா களிற்றினமும் நலங்கொள்நவ மணிக்குவையும் சுமந்தெக்கும் நான்றொசிந்து, கலங்களியங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம், வலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்ளென் மடநெஞ்சே. |
6.6 |
| 1104 | பஞ்சிச் சிறுகூழை யுருவாகி, மருவாத வஞ்சப்பெண் நஞ்சுண்ட அண்ணல்முன் நண்ணாத, கஞ்சைக் கடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம், நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே. |
6.7 |
| 1105 | செழுநீர் மலர்க்கமலம் திரையுந்த வன்பகட்டால், உழுநீர் வயலுழவ ருழப்பின்முன் பிழைத்தெழுந்த, கழுநீர் கடிகமழும் கடன்மல்லைத் தலசயனம், தொழுநீர் மனத்தவரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே. |
6.8 |
| 1106 | பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு, இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்,விசும்பில் கணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம், வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே. |
6.9 |
| 1107 | கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து, அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான், வடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார், முடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே. |
6.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

