ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – இரண்டாம் பத்து – ஐந்தாம் திருமொழி
| 1088 | பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை, போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை, காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. |
5.1 |
| 1089 | பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்_லை மெய்ந்_லென் றென்றுமோதி மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும் நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை, காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. |
5.2 |
| 1090 | உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில், தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும், கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. |
5.3 |
| 1091 | பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்னோக்கின், ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக் காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. |
5.4 |
| 1092 | பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம் ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை, தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. |
5.5 |
| 1093 | கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற இடந்தானை, வளைமருப்பி னேனமாகி இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம் கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. |
5.6 |
| 1094 | பேணாத வலியரக்கர் மெலியவன்று பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை, பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப் பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை, காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. |
5.7 |
| 1095 | பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை, தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி, என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. |
5.8 |
| 1096 | தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல் விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு, பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. |
5.9 |
| 1097 | படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி, தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை, கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல், திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ. |
5.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

