ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – இரண்டாம் பத்து –நான்காம் திருமொழி
| 1078 | அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க் கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ் நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர், நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. |
4.1 |
| 1079 | காண்டாவன மென்பதொர் காடமரர்க் கரையனது கண்டவன் நிற்க,முனே மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும் அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த் தாண்டான்,அவுணனவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய் நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. |
4.2 |
| 1080 | அலமன்னு மடல்சுரி சங்கமெடுத் தடலாழியி னாலணி யாருருவில், புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறைதீரமு னாளடு வாளமரில், பலமன்னர் படச்சுட ராழியினைப் பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர் நிலமன்னனு மாயுல காண்டவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. |
4.3 |
| 1081 | தாங்காததோ ராளரி யாயவுணன் றனைவீட முனிந்தவ னாலமரும், பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில், பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட, நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. |
4.4 |
| 1082 | மாலுங்கட லாரம லைக்குவடிட் டணைகட்டி வரம்புருவமதிசேர் கோலமதி ளாயவி லங்கைகெடப் படைதொட்டொரு காலம ரிலதிர, காலமிது வென்றயன் வாளியினால் கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும், நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. |
4.5 |
| 1083 | பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக் காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்- பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான், நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. |
4.6 |
| 1084 | புகராருரு வாகிமுனிந்தவனைப் புகழ்வீட முனிந்துயி ருண்டு,அசுரன் நகராயின பாழ்பட நாமமெறிந்- ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன், பகராதவ னாயிர நாமமடிப் பணியாதவ னைப்பணி யாமலரில், நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. |
4.7 |
| 1085 | பிச்சச்சிறு பீலிபி டித்துலகில் பிணந்தின்மடவாரவர் போல்,அங்ஙனே அச்சமிலர் நாணில ராதன்மையால் அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய், நச்சிநம னாரடை யாமைநமக் கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு, நிச்சம்நினைவார்க்கருள் செய்யுமவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. |
4.8 |
| 1086 | பேசுமள வன்றிது வம்மின்நமர். பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள், நாசமது செய்திடும் ஆதன்மையால் அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல் வாசமணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்துழல் வார்,மதியில் நீசரவர் சென்றடை யாதவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. |
4.9 |
| 1087 | நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில் கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,உடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர், கொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே. |
4.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

