ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – இரண்டாம் பத்து – ஒன்பதாம் திருமொழி
| 1128 | சொல்லுவன் சொற்பொருள் தானவை யாய்ச்சுவை யூறொலி நாற்றமும் தோற்றமுமாய், நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி, பல்லவன் வில்லவ னென்றுல கில்பல ராய்ப்பல வேந்தர் வணங்குகழற் பல்லவன், மல்லையர் கோன்பணிநத பர மேச்சுர விண்ணக ரமதுவே. |
9.1 |
| 1129 | கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட ரும்நில னும்மலை யும்,தன்னுந்தித் தார்மன்னு தாமரைக் கண்ணனி டம்தட மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி, தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செரு வில்திறல் வாட்டிய திண்சிலையோன், பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பர மேச்சுர விண்ணக ரமதுவே. |
9.2 |
| 1130 | உரந்தரு மெல்லணைப் பள்ளிகொண் டானொரு கால்முன்னம் மாவுரு வாய்க்கடலுள், வரந்தரும் மாமணி வண்ணனி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி, நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு வாயி லுகச்செரு வில்முனநாள், பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. |
9.3 |
| 1131 | அண்டமு மெண்டிசை யும்நில னுமலை நீரொடு வானெரி கால்முதலா உண்டவன், எந்தைபி ரானதி டமொளி மாடங்கள் சூந்தழ காயகச்சி, விண்டவ ரிண்டைக்கு ழாமுட னேவிரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து, பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. |
9.4 |
| 1132 | தூம்புடைத் திண்கைவன் தாள்களிற் றின்துயர் தீர்த்தர வம்வெருவ,முனநாள் பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி, தேம்பொழில் குன்றெயில் தென்னவ னைத்திசைப் பச்செரு மேல்வியந் தன்றுசென்ற, பாம்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. |
9.5 |
| 1133 | திண்படைக் கோளரி யினுரு வாய்த்திற லோனக லம்செரு வில்முனநாள், புண்படப் போழ்ந்த பிரானதிடம்பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி, வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த, பண்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. |
9.6 |
| 1134 | இலகிய நீண்முடி மாவலி தன்பெரு வேள்வியில் மாணுரு வாய்முனநாள், சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி, உலகுடை மன்னவன் தென்னவ னைக்கன்னி மாமதிள் சூழ்கரு வூர்வெருவ, பலபடை சாயவென் றான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. |
9.7 |
| 1135 | குடைத்திறல் மன்னவ னாயொரு கால்குரங் கைப்படை யா,மலை யால்கடலை அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி, விடைத்திறல் வில்லவன் நென்மெலி யில்வெரு வச்செரு வேல்வலங் கைப்பிடித்த, படைத்திறல் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. |
9.8 |
| 1136 | பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின், மறையுடை மால்விடை யேழடர்த் தாற்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி, கறையுடை வாள்மற மன்னர்க்கெ டக்கடல் போல முழங்கும் குரல்கடுவாய், பறையுடைப் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. |
9.9 |
| 1137 | பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணகர்மேல், கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த, சீர்மன்னு செந்தமிழ் மாலைவல் லார்த்திரு மாமகள் தன்னரு ளால்,உலகில் தேர்மன்ன ராயொலி மாகடல் சூழ்செழு நீருல காண்டு திகழ்வர்களே. |
9.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

