ஆறாம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – நான்காம் பத்து – ஆறாம் திருமொழி

1298 தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு,
நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின்
நடுக்கந்தீர்த்தாய், மாவளம் பெருகி மன்னும்
மறையவர் வாழும் நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே
6.1

 

1299 மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,
கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
6.2

 

1300 உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி,
கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரசளித்தாய்,
பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக்
கருத்தனே காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே
6.3

 

1301 முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து, ஆங்
கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,
கனைகழல் காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே
6.4

 

1302 படவர வுச்சி தன்மேல் பாய்ந்துபன்னடங்கள் செய்து,
மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே,
தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,
கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
6.5

 

1303 மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,
பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்,
நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய,
கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
6.6

 

1304 மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி,
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்,
பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக்
காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களை கணீயே
6.7

 

1305 ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,
காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே
6.8

 

1306 சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி,
அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்,
மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை,
கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
6.9

 

1307 மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே
6.10

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!