ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – நான்காம் பத்து – ஏழாம் திருமொழி
| 1308 | கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய், நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர், திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள் அண்ணா, அடியே னிடரைக் களையாயே |
7.1 |
| 1309 | கொந்தார் துளவ மலர்கொன் டணிவானே, நந்தா தபெரும் புகழ்வே தியர்நாங்கூர், செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள் எந்தாய், அடியே னிடரைக் களையாயே |
7.2 |
| 1310 | குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே, நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர் சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள் நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே |
7.3 |
| 1311 | கானார் கரிகொம் பதொசித்த களிறே, நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர், தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள் ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே |
7.4 |
| 1312 | வேடார் திருவேங் கடம்மேய விளக்கே, நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர், சேடார் பொழில்சூழ் திருவெள்ளக்குளத்தாய், பாடா வருவேன் விணையா யினபாற்றே |
7.5 |
| 1313 | கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய், நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச் செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே, எல்லா இடரும் கெடுமா றருளாயே |
7.6 |
| 1314 | கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே, நாலா கியவே தியர்மன் னியநாங்கூர், சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள் மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே |
7.7 |
| 1315 | வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய், நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர், சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள் ஆரா வமுதே, அடியேற் கருளாயே |
7.8 |
| 1316 | பூவார் திருமா மகள்புல் லியமார்பா, நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த் தேவா திருவெள்ளக் குளத்துறை வானே, ஆவா அடியா னிவன், என் றருளாயே |
7.9 |
| 1317 | நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச் செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை, கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை, வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே |
7.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

