ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – நான்காம் பத்து – மூன்றாம் திருமொழி
| 1268 | பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை, வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப, சீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே |
3.1 |
| 1269 | பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப் பேதியா வின்பவெள் ளத்தை, இறப்பெதிர் காலக் கழிவுமா னானை ஏழிசை யின்சுவை தன்னை, சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே |
3.2 |
| 1270 | திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும், படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய, திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே |
3.3 |
| 1271 | வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் றன்னை, அசைவறு மமர ரடியிணை வணங்க அலைகடல் துயின்றவம் மானை, திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, உயர்மணி மகுடம் சூடிநின் றானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே |
3.4 |
| 1272 | தீமனத் தரக்கர் திறலழித் தவனே. என்றுசென் றடைந்தவர் தமக்கு, தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே, தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே |
3.5 |
| 1273 | மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை, கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை கலங்கவோர் வாளிதொட் டானை, செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, அல்லிமா மலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே |
3.6 |
| 1274 | வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை, கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக் கருமுகில் திருநிறத் தவனை, செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே |
3.7 |
| 1275 | அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை, மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை, தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே |
3.8 |
| 1276 | களங்கனி வண்ணா. கண்ணணே. என்றன் கார்முகி லே என நினைந்திட்டு, உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை, தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே |
3.9 |
| 1277 | தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி, ஊனமில் பாட லொன்பதோ டொன்றும் ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள், மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே |
3.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

