ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – நான்காம் பத்து – இரண்டாம் திருமொழி
| 1258 | கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும் அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில் செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ் வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே |
2.1 |
| 1259 | பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில், ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில், நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம், வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே |
2.2 |
| 1260 | அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம் உண்டு, கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில், கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட, வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே |
2.3 |
| 1261 | பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு, ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில், கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே |
2.4 |
| 1262 | சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும் ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில், ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும் மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே |
2.5 |
| 1263 | அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த, கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில், கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள், மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே |
2.6 |
| 1264 | உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில், இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்,கை வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே |
2.7 |
| 1265 | வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில் பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய் வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே |
2.8 |
| 1266 | இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும் உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில், குந்தி வாழையின் கொழுங்கனி _கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய், மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே |
2.9 |
| 1267 | மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள், அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி, பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில் எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே |
2.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

