ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – முதல் பத்து – ஒன்றாம் திருமொழி
| 948 | வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து, கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி, ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து, நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம். |
1.1 |
| 949 | ஆவியே. அமுதே. எனநினைந்துருகி அவரவர்ப்பணைமுலைதுணையா, பாவியேனுணரா தெத்தனைபகலும் பழுதுபோயொழிந்தனநாள்கள், தூவிசேரன்னம் துணையொடும்புணரும் சூழ்புனற்குடந்தையேதொழுது, என் நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம். |
1.2 |
| 950 | சேமமேவேண்டித் தீவினைபெருக்கித் தெரிவைமாருருவமேமருவி, ஊமனார் கண்டகனவிலும்பழுதாய் ஒழிந்தனகழிந்தவந்நாள்கள், காமனார் தாதைநம்முடையடிகள் தம்மடைந்தார்மனத்திருப்பார், நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம். |
1.3 |
| 951 | வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி, நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன் என்செய்கேன் நெடுவிசும்பணவும், பன்றியா யன்றுபாரகங்கீண்ட பாழியா னாழியானருளே, நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம். |
1.4 |
| 952 | கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன் கண்டவாதிரிதந்தேனேலும், தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன் சிக்கெனத்திருவருள்பெற்றேன், உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன் உடம்பெலாம்கண்ணநீர்சோர, நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் நாராயணாவென்னும்நாமம். |
1.5 |
| 953 | எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம் எனக்கரசு என்னுடைவாணாள், அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி அவருயிர்செகுத்தவெம்மண்ணல், வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி, நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம். |
1.6 |
| 954 | இற்பிறப்பறியீர் இவரவரென்னீர் இன்னதோர்த்தன்மையென்றுணரீர், கற்பகம்புலவர்களைகணென்றூலகில் கண்டவாதொண்டரைப்பாடும், சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையேதொழுமின், நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் நாராயணாவென்னும்நாமம். |
1.7 |
| 955 | கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை, பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெருநிலத்தாருயிர்க்கெல்லாம், செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்குய்யுமாறெண்ணி, நற்றுணையாகப்பற்றினேன் அடியேன் நாராயணாவென்னும்நாமம். |
1.8 |
| 956 | குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம், நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும், வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும், நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம். |
1.9 |
| 957 | மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி, செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்., துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம், நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம். |
1.10 |
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

