ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – முதல் பத்து – நான்காம் திருமொழி
| 978 | ஏனமுனாகியிருநிலமிடந்து அன்றிணையடியிமையவர்வணங்க, தானவனாகம்தரணியில்புரளத் தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன், தேனமர்சோலைக்கற்பகம்பயந்த தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து, வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. |
4.1 |
| 979 | கானிடையுருவைச்சுடுசரம்துரந்து கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன், ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன், தேனுடைக்கமலத்தயனொடுதேவர் சென்றுசென்றிறைஞ்சிட, பெருகு வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. |
4.2 |
| 980 | இலங்கையும்கடலுமடலருந்துப்பின் இருநிதிக்கிறைவனும், அரக்கர் குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற, விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில் வெண்துகிற்கொடியெனவிரிந்து, வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. |
4.3 |
| 981 | துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே. தொழுதெழுதொண்டர்கள்தமக்கு, பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும் பேரருளாளனெம்பெருமான், அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் ஆரமும்வாரிவந்து, அணிநீர் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. |
4.4 |
| 982 | பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன் பெருமுலைசுவைத்திட, பெற்ற தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன், சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த செம்பொன்செய்விலங்கலிலிலங்கு, வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. |
4.5 |
| 983 | தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி திறத்து ஒருமறத்தொழில்புரிந்து, பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த பனிமுகில்வண்ணனெம்பெருமான், காரணந்தன்னால்கடும்புனல்கயத்த கருவரைபிளவெழக்குத்தி, வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. |
4.6 |
| 984 | வெந்திறல்களிறும்வேலைவாயமுதும் விண்ணொடுவிண்ணவர்க்கரசும், இந்திரற்கருளியெமக்குமீந்தருளும் எந்தையெம்மடிகளெம்பெருமான், அந்தரத்தமரரடியிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி, மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. |
4.7 |
| 985 | மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த மன்னவன்பொன்னிறத்துரவோன், ஊன்முனிந்தவனதுடலிருபிளவா உகிர்நுதிமடுத்து, அயனரனைத் தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம் தவிர்த்தவன், தவம்புரிந்துயர்ந்த மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. |
4.8 |
| 986 | கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர்க் குரைகடலுலகுடனனைத்தும், உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த உம்பருமூழியுமானான், அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து அங்கவனியாளலமர, பெருகு மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. |
4.9 |
| 987 | வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை, கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணிக் கலியன்வாயொலிசெய்தபனுவல், வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள் வானவருலகுடன் மருவி, இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ் இமையவராகுவர்தாமே. |
4.10 |
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

