ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – முதல் பத்து – மூன்றாம் திருமொழி
| 968 | முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து, இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன், பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே. |
3.1 |
| 969 | முதுகுபற்றிக்கைத்த லத்தால் முன்னொருகோலூன்றி, விதிர்விதிர்த்துக்கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி, இதுவென்னப்பர் மூத்தவா றென்று இளையவரேசாமுன், மதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே. |
3.2 |
| 970 | உறிகள்போல்மெய்ந்நரம் பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி, நெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன், அறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி, வெறிகொள்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே. |
3.3 |
| 971 | பீளைசோரக்கண்ணி டுங்கிப் பித்தெழமூத்திருமி, தாள்கள் நோவத்தம்மில் முட்டித் தள்ளிநடவாமுன், காளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான், வாளைபாயும்தண்ட டஞ்சூழ் வதரிவணங்குதுமே. |
3.4 |
| 972 | பண்டுகாமரான வாறும் பாவையர்வாயமுதம் உண்டவாறும், வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி, தண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன், வண்டுபாடும்தண்டு ழாயான் வதரிவணங்குதுமே. |
3.5 |
| 973 | எய்த்தசொல்லோடீளை யேங்கி இயிருமியிளைத்துடலம், பித்தர்ப்போலச்சித்தம் வேறாய்ப் பேசியயராமுன், அத்தனெந்தையாதி மூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த, மைத்தசோதியெம்பெ ருமான் வதரிவணங்குதுமே. |
3.6 |
| 974 | பப்பவப்பர்மூத்த வாறு பாழ்ப்பதுசீத்திரளை யொப்ப, ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று, செப்புநேர்மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம், வைப்பும்நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே. |
3.7 |
| 975 | ஈசிபோமினீங்கி ரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம் கூசியிட்டீரென்று பேசும் குவளையங்கண்ணியர்ப்பால், நாசமானபாசம் விட்டு நன்னெறிநோக்கலுறில், வாசம்மல்குதண்டு ழாயான் வதரிவணங்குதுமே. |
3.8 |
| 976 | புலன்கள்நையமெய்யில் மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி, கலங்கவைக்கள்போத வுந்திக் கண்டபிதற்றாமுன், அலங்கலாயதண்டு ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி, வலங்கொள்தொண்டர்ப்பாடி யாடும் வதரிவணங்குதுமே. |
3.9 |
| 977 | வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை, கண்டல்வேலிமங்கை வேந்தன் கலியனொலிமாலை, கொண்டுதொண்டர்ப்பாடி யாடக் கூடிடில்நீள்விசும்பில், அண்டமல்லால்மற்ற வர்க்கு ஓராட்சியறியோமே. |
3.10 |
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

