ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – மூன்றாம் பத்து – ஏழாம் திருமொழி
| 1208 | கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளைவந்து, வள்ளிமருங் குலென்றன் மடமானினைப் போதவென்று, வெள்ளிவளைக் கைப்பற்றப் பெற்றதாயரை விட்டகன்று, அள்ளலம் பூங்கழனி யணியாலி புகுவர்க்கொலோ. |
7.1 |
| 1209 | பண்டிவ னாயன்நங்காய். படிறன்புகுந்து, என்மகள்தன் தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை யுகந்து,அவன்பின் கெண்டையொண் கண்மிளிரக் கிளிபோல்மிழற் றிநடந்து, வண்டமர் கானல்மல்கும் வயலாலி புகுவர்க்கொலோ. |
7.2 |
| 1210 | அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய். அரக்கர்க்குலப் பாவைதன்னை, வெஞ்சின மூக்கரிந்த விறலோந்திறங் கேட்கில்,மெய்யே பஞ்சியல் மெல்லடியெம் பணைத்தோளி பரக்கழிந்து, வஞ்சியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ. |
7.3 |
| 1211 | ஏதுஅவன் தொல்பிறப்பு இளைய வன்வளை யூதி,மன்னர் தூதுவ னாயவனூர் சொலுவீர்கள்.சொலீரறியேன், மாதவன் தந்துணையா நடந்தாள்தடஞ் சூழ்புறவில், போதுவண் டாடுசெம்மல் புனலாலி புகுவர்க்கொலோ. |
7.4 |
| 1212 | தாயெனை யென்றிரங்காள் தடந்தோளி தனக்கமைந்த, மாயனை மாதவனை மதித்தென்னை யகன்றைவள், வேயன தோள்விசிறிப் பெடையன்ன மெனநடந்து, போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர்க்கொலோ. |
7.5 |
| 1213 | எந்துணை யென்றெடுத்தேற் கிறையேனு மிரங்கிற்றிலள், தன்துணை யாயவென்றன் தனிமைக்கு மிரங்கிற்றிலள், வன்துணை வானவர்க்காய் வரஞ்செற்றரங் கத்துறையும், இந்துணை வன்னொடும்போ யெழிலாலி புகுவர்க்கொலோ. |
7.6 |
| 1214 | அன்னையு மத்தனுமென் றடியோமுக் கிரங்கிற்றிலள், பின்னைதன் காதலன்றன் பெருந்தோள்நலம் பேணினளால், மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கு மிடையாள்நடந்து, புன்னையும் அன்னமும்சூழ் புனலாலி புகுவர்க்கொலோ. |
7.7 |
| 1215 | முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற, சிற்றில்மென் பூவையும்விட் டகன்றசெழுங் கோதைதன்னை, பெற்றிலேன் முற்றிழையைப் பிறப்பிலிபின் னேநடந்து, மற்றெல்லாம் கைதொழப்போய் வயலாலி புகுவர்க்கொலோ. |
7.8 |
| 1216 | காவியங் கண்ணியெண்ணில் கடிமாமலர்ப் பாவையொப்பாள், பாவியேன் பெற்றமையால் பணைத்தோளி பரக்கழிந்து, தூவிசே ரன்னமன்ன நடையாள்நெடு மாலொடும்போய், வாவியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ. |
7.9 |
| 1217 | தாய்மனம் நின்றிரங்கத் தனியேநெடு மால்துணையா, போயின பூங்கொடியாள் புனலாலி புகுவரென்று, காய்சின வேல்கலிய னொலிசெய்தமிழ் மாலைபத்தும், மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே. |
7.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

