ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – மூன்றாம் பத்து – ஒன்றாம் திருமொழி
| 1148 | இருந்தண் மாநில மேனம தாய்வளை மருப்பினி லகத்தொடுக்கி, கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம் கமலநன் மலர்த்தேறல் அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளியம் பொழிலூடே, செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு திருவயிந் திரபுரமே. |
1.1 |
| 1149 | மின்னு மாழியங் கையவன் செய்யவள் உறைதரு திருமார்பன், பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய பரனிடம் வரைச்சாரல், பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்து, தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு திருவயிந் திரபுரமே. |
1.2 |
| 1150 | வைய மேழுமுண் டாலிலை வைகிய மாயவன், அடியவர்க்கு மெய்ய னாகிய தெய்வநா யகனிடம் மெய்தகு வரைச்சாரல், மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லையங் கொடியாட, செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு திருவயிந் திரபுரமே. |
1.3 |
| 1151 | மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன் மார்பக மிருபிளவா, கூறு கொண்டவன் குலமகற் கின்னருள் கொடுத்தவ னிடம்,மிடைந்து சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை விசும்புற மணிநீழல், சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ் திருவயிந் திரபுரமே. |
1.4 |
| 1152 | ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட மளந்து ஆயர், பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் பொன்மலர் திகழ்,வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்தோடி தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு திருவயிந் திரபுரமே. |
1.5 |
| 1153 | கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்திளங் கொடியோடும், கானு லாவிய கருமுகில் திருநிறத் தவனிடம் கவினாரும், வானு லாவிய மதிதவழ் மால்வரை மாமதிள் புடைசூழ, தேனு லாவிய செழும்பொழில் தழுவிய திருவயிந் திரபுரமே. |
1.6 |
| 1154 | மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசையிலங்கை மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன திடம்மணி வரைநீழல், அன்ன மாமல ரரவிந்தத் தமளியில் பெடையொடு மினிதமர, செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண் திருவயிந் திரபுரமே. |
1.7 |
| 1155 | விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு, நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார், வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுந்தி, திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே. |
1.8 |
| 1156 | வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் விசயனுக் காய்,மணித்தேர்க் கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் குலவுதண் வரைச்சாரல், கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் பாளைகள் கமழ்சாரல், சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே. |
1.9 |
| 1157 | மூவ ராகிய வொருவனை மூவுல குண்டுமிழ்ந் தளந்தானை, தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் திருவயிந் திரபுரத்து, மேவு சோதியை வேல்வல வன்கலி கன்றி விரித்துரைத்த, பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே. |
1.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

