14. பட்டி மேய்ந்து
| 637 | பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய், இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே?- இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி, விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. |
1 |
| 638 | அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும், குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே?- கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல, வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. |
2 |
| 639 | மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை, ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே?- மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும், மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. |
3 |
| 640 | கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத் தி,என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் றன்னைக் கண்டீரே?- போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல், வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. |
4 |
| 641 | மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல், ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரே?- பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல், வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. |
5 |
| 642 | தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல், புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே?- உருவு கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல், விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோ மே. |
6 |
| 643 | பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை கருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே?- அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல், விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. |
7 |
| 644 | வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை, அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே?- களிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல், மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. |
8 |
| 645 | நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி, வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் றன்னைக் கண்டீரே?- காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளு முடன்மடிய, வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. |
9 |
| 646 | பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் றன்னை, பாரின்மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல், மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள், பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே. |
10 |
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

