2: நாமமாயிரம்
| 514 | நாமமாயிர மேத்தநின்ற நாராயணாநர னே,உன்னை மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதை தவிருமே, காமன்போதரு காலமென்றுபங் குனிநாள்கடை பாரித்தோம், தீமைசெய்யும் சிரீதரா.எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. |
1 |
| 515 | இன்றுமுற்றும் முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை, நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய், அன்றுபாலக னாகியாலிலை மேல்துயின்றவெம் மாதியாய், என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் கம்மெழாததெம் பாவமே. |
2 |
| 516 | குண்டுநீருறை கோளரீ.மத யானைகோள்விடுத் தாய்,உன்னைக் கண்டுமாலுறு வோங்களைக்கடைக் கண்களாலிட்டு வாதியேல், வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் கைகளால்சிர மப்பட்டோ ம், தெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. |
3 |
| 517 | பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன், பேச்சும்செய்கையும், எங்களை மையலேற்றி மயக்கவுன்முகம் மாயமந்திரந் தான்கொலோ, நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை நோவநாங்களு ரைக்கிலோம், செய்யதாமரைக் கண்ணினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே. |
4 |
| 518 | வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட, வீதிவாய்த் தெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும், உன்றன்மேல் உள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய், கள்ளமாதவா.கேசவா.உன் முகத்தனகண்க ளல்லவே. |
5 |
| 519 | முற்றிலாதபிள் ளைகளோம்முலை போந்திலாதோமை, நாடொறும் சிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி துண்டுதிண்ணென நாமது கற்றிலோம்,கட லையடைத்தரக்- கர்குலங்களை முற்றவும் செற்று,இலங்கையைப் பூசலாக்கிய சேவகா.எம்மை வாதியேல். |
6 |
| 520 | பேதநன்கறி வார்களோடிவை பேசினால்பெரி திஞ்சுவை, யாதுமொன்றறி யாதபிள்ளைக ளோமைநீநலிந் தென்பயன், ஓதமாகடல் வண்ணா.உன்மண வாட்டிமாரொடு சூழறும், சேதுபந்தம் திருத்தினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே. |
7 |
| 521 | வட்டவாய்ச்சிறு தூதையோடு சிறுசுளகும்மண லுங்கொண்டு, இட்டமாவிளை யாடுவோங்களைச் சிற்றிலீடழித் தென்பயன், தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர்ச் சக்கரம்கையி லேந்தினாய், கட்டியும்கைத் தாலின்னாமை அறிதியேகடல் வண்ணனே. |
8 |
| 522 | முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்து, சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தா, முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்- பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப் பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்? |
9 |
| 523 | சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் சிற்றில்நீசிதை யேல்.என்று, வீதிவாய்விளை யாடுமாயர் சிறுமியர்மழ லைச்சொல்லை, வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி புத்தூர்மன்விட்டு சித்தன்றன், கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை வின்றிவைகுந்தம் சேர்வரே. |
10 |

