3. கோழியழைப்பதன்
| 524 | கோழி யழைப்பதன் முன்னம் குடைந்துநீ ராடுவான் போந்தோம், ஆழியஞ் செல்வ னெழுந்தான் அரவணை மேல்பள்ளி கொண்டாய், ஏழைமை யாற்றவும் பட்டோ ம் இனியென்றும் பொய்கைக்கு வாரோம், தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தரு ளாயே. |
1 |
| 525 | இதுவென் புகுந்ததிங் கந்தோ. இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய், மதுவின் துழாய்முடி மாலே. மாயனே.எங்க ளமுதே, விதியின்மை யாலது மாட்டோ ம் வித்தகப் பிள்ளாய். விரையேல், குதிகொண் டரவில் நடித்தாய். குருந்திடைக் கூறை பணியாய். |
2 |
| 526 | எல்லே யீதென்ன இளமை எம்மனை மார்காணி லொட்டார், பொல்லாங்கீ தென்று கருதாய் பூங்குருந் தேறி யிருத்தி, வில்லாலி லங்கை யழித்தாய்.நீ வேண்டிய தெல்லாம் தருவோம், பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தரு ளாயே. |
3 |
| 527 | பரக்க விழித்தெங்கும் நோக்கிப் பலர்குடைந் தாடும் சுனையில், அரக்கநில் லாகண்ண நீர்கள் அலமரு கின்றவா பாராய், இரக்கமே லொன்று மிலாதாய். இலங்கை யழித்த பிரானே, குரக்கர சாவ தறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய். |
4 |
| 528 | காலைக் கதுவிடு கின்ற கயலோடு வாளை விரவி, வேலைப் பிடித்தெந்னை மார்கள் ஓட்டிலென் னவிளை யாட்டோ , கோலச்சிற் றாடை பலவுங் கொண்டுநீ யேறி யிராதே, கோலங் கரிய பிரானே. குருந்திடைக் கூறை பணியாய். |
5 |
| 529 | தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்களெங் காலைக் கதுவ, விடத்தே ளெறிந்தாலே போல வேதனை யற்றவும் பட்டோ ம் குடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவே, படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள் பட்டைப் பணித்தரு ளாயே. |
6 |
| 530 | நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய், ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழியெல் லாமுணர் வானே, ஆர்வ முனக்கே யுடையோம் அம்மனை மார்காணி லொட்டார், போர விடாயெங்கள் பட்டைப் பூங்குருந் தேறியி ராதே. |
7 |
| 531 | மாமிமார் மக்களே யல்லோம் மற்றுமிங் கெல்லாரும் போந்தார், தூமலர்க் கண்கள் வளரத் தொல்லையி ராத்துயில் வானே, சேமமே லன்றிது சாலச் சிக்கென நாமிது சொன்னோம், கோமள ஆயர்கொ ழுந்தே. குருந்திடைக் கூறை பணியாய். |
8 |
| 532 | கஞ்சன் வலைவைத்த வன்று காரிரு ளெல்லில் பிழைத்து, நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் நின்றஇக் கன்னிய ரோமை, அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும், வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மசிமையி லீ.கூறை தாராய். |
9 |
| 533 | கன்னிய ரோடெங்கள் நம்பி கரிய பிரான்விளை யாட்டை, பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன்பட்டன் கோதை, இன்னிசை யால்சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம்போய், மன்னிய மாதவ னோடு வைகுந்தம் புக்கிருப் பாரே. |
2 10 |

