4. தெள்ளியார் பலர்
| 534 | தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார், வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார், பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட, கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. |
1 |
| 535 | காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன், ஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும் கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. |
2 |
| 536 | பூம கன்புகழ் வானவர் போற்றுதற் காம கன்,அணி வாணுதல் தேவகி மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம், கோம கன்வரில் கூடிடு கூடலே. |
3 |
| 537 | ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட, பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து, வாய்த்த காளியன் மேல்நட மாடிய, கூத்த னார்வரில் கூடிடு கூடலே. |
4 |
| 538 | மாட மாளிகை சூழ்மது ரைப்பதி நாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு, ஓடை மாமத யானை யுதைத்தவன், கூடு மாகில்நீ கூடிடு கூடலே. |
5 |
| 539 | அற்ற வன்மரு தம்முறி யநடை கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால் செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி, கொற்ற வன்வரில் கூடிடு கூடலே. |
6 |
| 540 | அன்றின் னாதன செய்சிசு பாலனும், நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும், வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன் கொன்ற வன்வரில் கூடிடு கூடலே. |
7 |
| 541 | ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக் காவ லன்,கன்று மேய்த்து விளையாடும், கோவ லன்வரில் கூடிடு கூடலே. |
8 |
| 542 | கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று, பண்டு மாவலி தன்பெரு வேள்வியில், அண்ட மும்நில னும்அடி யொன்றினால், கொண்ட வன்வரில் கூடிடு கூடலே. |
9 |
| 543 | பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம் ஒழுகு வாரண முய்ய வளித்த,எம் அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள், குழக னார்வரில் கூடிடு கூடலே. |
10 |
| 544 | ஊடல் கூட லுணர்தல் புணர்தலை, நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர், கூட லைக்குழற் கோதைமுன் கூறிய, பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. |
11 |

