ஐந்தாம் திருமொழி


5. மன்னு பெரும்புகழ்

 

545 மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை, உகந்தது காரணமாக என்
சங்கிழக் கும்வழக் குண்டே,
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே,
பன்னியெப் போது மிருந்து விரைந்தென்
பவளவா யன்வரக் கூவாய்.
 1

 

546 வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட
விமல னெனக்குருக் காட்டான்,
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்,
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங் குயிலே,
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்
வேங்கட வன்வரக் கூவாய்.
2

 

547 மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல்,சர மாரி
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த
தலைவன் வரவெங்குங் காணேன்,
போதலர் காவில் புதுமணம் நாறப்
பொறிவண்டின் காமரங் கேட்டு,உன்
காதலி யோடுடன் வாழ்குயி லே.என்
கருமாணிக் கம்வரக் கூவாய்.
3

 

548 என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்,
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்,
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது
நீயு மறிதி குயிலே,
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய னைவரக் கூவாய்.
4

 

549 மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்
வில்லிபுத் தூருறை வான்றன்,
பொன்னடி காண்பதோ ராசயி னாலென்
பொருகயற் கண்ணிணை துஞ்சா,
இன்னடி சிலோடு பாலமு தூட்டி
எடுத்தவென் கோலக் கிளியை,
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே.
உலகளந் தான்வரக் கூவாய்.
 5

 

550 எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்
இருடீகே சன்வலி செய்ய,
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
முலயு மழகழிந் தேன்நான்,
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லே,என்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே.
6

 

551 பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோ ராசயி னால்,என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்,
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்,
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ,
சாலத் தருமம் பெறுதி.
7

 

552 சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
சதுரன் பொருத்த முடையன்,
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்
நானு மவனு மறிதும்,
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்
சிறுகுயி லே,திரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்
அவனைநான் செய்வன காணே.
8

 

553 பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்
பாசத் தகப்பட்டி ருந்தேன்,
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி
லே.குறிக் கொண்டிது நீகேள்,
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்,
இங்குள்ள காவினில் வாழக் கருதில்
இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்.
9

 

554 அன்றுல கம்மளந் தானை யுகந்தடி-
மைக்கண வன்வலி செய்ய,
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை
நலியும் முறைமை யறியேன்,
என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத்
தகர்த்தாதே நீயும் குயிலே,
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன்.
10

 

555 விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி,
கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு
கருங்குயி லே.என்ற மாற்றம்,
பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன்
பட்டர்பி ரான்கோதை சொன்ன,
நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ-
நாராய ணாயவென் பாரே.
 11