6. வாரணமாயிரம்
| 556 | வாரண மாயிரம் சூழவ லம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். |
1 |
| 557 | நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ், கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர் காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். |
2 |
| 558 | இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம், வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து, மந்திரக் கோடியு டுத்திம ணமாலை, அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். |
3 |
| 559 | நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி, பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி, பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை, காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். |
4 |
| 560 | கதிரொளி தீபம் கலசமு டனேந்தி, சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள, மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். |
5 |
| 561 | மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத, முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். |
6 |
| 562 | வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால், பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து, காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி, தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். |
7 |
| 563 | இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான், நம்மையு டையவன் நாராய ணன்நம்பி, செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி, அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். |
8 |
| 564 | வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி, அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து, பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். |
9 |
| 565 | குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து, மங்கல வீதி வலம்செய்து மணநீர், அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல், மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். |
10 |
| 566 | ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை, வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல், தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர், வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. |
11 |

