ஏழாம் திருமொழி


7. கருப்பூரம் நாறுமோ

 

567 கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.
 1

 

568 கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்,
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே.
2

 

569 தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ.
3

 

570 சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,
அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே.
4

 

571 உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை,
இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே.
5

 

572 போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்,
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு
சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.

 

573 செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்
செங்கட் கருமேனி வாசுதே வனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே.
7

 

574 உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே.
8

 

575 பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே.
9

 

576 பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,
ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே.
 10