8. விண்ணீல மேலாப்பு
| 577 | விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள், தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே, கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை, பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே? |
1 |
| 578 | மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள், வேங்கடத்துச் சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே, காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல், ஏமத்தோர் தென்றலுக்கிங்- கிலக்காய்நா னிருப்பேனே. |
2 |
| 579 | ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம், எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால், குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி, அளியத்த மேகங்காள். ஆவிகாத் திருப்பேனே. |
3 |
| 580 | மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு, என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோ றும், பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே. |
4 |
| 581 | வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள், வேங்கடத்துத் தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள், ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான், தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே. |
5 |
| 582 | சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள், மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள், உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து,என்னை நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே. |
6 |
| 583 | சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள், வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம், கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து,ஒருநாள் தங்குமே லென்னாவி தங்குமென் றுரயீரே. |
7 |
| 584 | கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள், வேங்கடத்துப் போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி, நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை, வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே. |
8 |
| 585 | மதயானை போலெழுந்த மாமுகில்காள், வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள். பாம்பணையான் வார்த்தையென்னே, கதியென்றும் தானாவான் கருதாது,ஓர் பெண்கொடியை வதைசெய்தான். என்னும்சொல் வையகத்தார் மதியாரே. |
9 |
| 586 | நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய், மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம், போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ், ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே. |
10 |

