9. சிந்தூரச் செம்பொடி
| 587 | சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும், இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால், மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ. |
1 |
| 588 | போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில், தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற, கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன், ஆர்க்கிடு கோதோழி. அவன்தார்ச்செய்த பூசலையே. |
2 |
| 589 | கருவிளை யொண்மலர்காள். காயாமலர் காள்,திருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர், திருவிளை யாடுதிண்டோ ள் திருமாலிருஞ் சோலைநம்பி, வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழ்க்குளதே. |
3 |
| 590 | பைம்பொழில் வாழ்குயில்காள். மயில்காள்.ஒண் கருவிளைகாள், வம்பக் களங்கனிகாள். வண்ணப்பூவை நறுமலர்காள், ஐம்பெரும் பாதகர்காள். அணிமாலிருஞ் சோலைநின்ற, எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? |
4 |
| 591 | துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற, செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்,மலர்மேல் தொங்கிய வண்டினங்காள். தொகுபூஞ்சுனை காள்,சுனையில் தங்குசெந் தாமரைகாள். எனக்கோர்சரண் சாற்றுமினே. |
5 |
| 592 | நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான் நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன், நூறு தடாநிறைந்த அக்கார வடிசில்சொன்னேன், ஏறு திருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. |
6 |
| 593 | இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்,நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன், தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள் நின்ற பிரான்,அடியேன் மனத்தேவந்து நேர்படிலே. |
7 |
| 594 | காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள், மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ, சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான், ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே. |
8 |
| 595 | கோங்கல ரும்பொழில்மா- லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் தூங்குபொன் மாலைகளோ- டுடனாய்நின்று தூங்குகின்றேன், பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும், சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. |
9 |
| 596 | சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது, வந்திழி யும்சிலம்பா- றுடைமாலிருஞ் சோலைநின்ற, சுந்தரனை, சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த, செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே. |
10 |

