10: கார்க்கோடல் பூக்காள்
| 597 | கார்க்கோடல் பூக்காள்.கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப் போர்க்கோலம் செய்து போர விடுத்தவ னெங்குற்றான், ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது, அணிதுழாய்த் தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்கவல் லேனந்தோ. |
1 |
| 598 | மேற்றோன்றிப் பூக்காள் மேலுல கங்களின் மீதுபோய், மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில், மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாது,எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துகொள் கிற்றிரே. |
2 |
| 599 | கோவை மணாட்டி.நீயுன் கொழுங்கனி கொண்டு,எம்மை ஆவி தொலைவியேல் வாயழ- கர்தம்மை யஞ்சுதும் பாவி யேன்தோன்றிப் பாம்பணை- யார்க்கும்தம் பாம்புபோல், நாவு மிரண்டுள வாய்த்து நாணிலி யேனுக்கே. |
3 |
| 600 | முல்லைப் பிராட்டி.நீயுன் முறுவல்கள் கொண்டு,எம்மை அல்லல் விளைவியே லாழிநங் காய்.உன்ன டைக்கலம், கொல்லை யரக்கியை மூக்கரிந் திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால், நானும் பிறந்தமை பொய்யன்றே. |
4 |
| 601 | பாடும் குயில்காள். ஈதென்ன பாடல்,நல் வேங்கட நாடர் நமக்கொரு வாழ்வுதந் தால்வந்து பாடுமின், ஆடும் கருளக் கொடியுடை யார்வந் தருள்செய்து, கூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே. |
5 |
| 602 | கணமா மயில்காள். கண்ணபி ரான்திருக் கோலம்போன்று, அணிமா நடம்பயின் றாடுகின் றீர்க்கடி வீழ்கின்றேன், பணமா டரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள், மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே. |
6 |
| 603 | நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள்,உம்மை நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன், குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து,எம்மை உடைமாடு கொண்டா னுங்களுக் கினியொன்று போதுமே ? |
7 |
| 604 | மழையே.மழையே.மண்புறம் பூசியுள் ளாய்நின்ற, மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற, அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத் தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே? |
8 |
| 605 | கடலே. கடலே.உன்னைக் கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு, என்னையும் உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன் நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே. |
9 |
| 606 | நல்லஎன் தோழி. நாக ணைமிசை நம்பரர், செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென், வில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரை, வல்ல பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே. |
10 |

