11. தாமுகக்கும்
| 607 | தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ, யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர், தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர், ஆமுகத்தை நோக்காரால் அம்மனே. அம்மனே. |
1 |
| 608 | எழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. |
2 |
| 609 | பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான், செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார், எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே. |
3 |
| 610 | மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார், பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற, பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல், இச்சை யுடையரே லித்தெருவே போதாரே ? |
4 |
| 611 | பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று, எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான், நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான், இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. |
5 |
| 612 | கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார், காவிரிநீர் செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார், எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது, நான்மறையின் சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே. |
6 |
| 613 | உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து, பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம், திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார், எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. |
7 |
| 614 | பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம், தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார், பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. |
8 |
| 615 | கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான், திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து, அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த, பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. |
9 |
| 616 | செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த, மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர், தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல், தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே . |
10 |

