பன்னிரெண்டாம் திருமொழி


12. மற்றிருந்தீர்

 

617 மற்றிருந் தீர்கட் கறியலாகா
மாதவ னென்பதோ ரன்புதன்னை,
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்
ஊமைய ரோடு செவிடர்வார்த்தை,
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப்
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி,
மற்பொருந் தாமற் களமடைந்த
மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின்.
 1

 

618 நாணி யினியோர் கருமமில்லை
நாலய லாரும் அறிந்தொழிந்தார்,
பாணியா தென்னை மருந்து செய்து
பண்டுபண் டாக்க வுறுதிராகில்,
மாணி யுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்,
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
2

 

619 தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
தனிவழி போயினாள். என்னும்சொல்லு,
வந்தபின் னைப்பழி காப்பரிது
மாயவன் வந்துருக் காட்டுகின்றான்,
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற,
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்.
3

 

620 அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று,
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்
சிறுமா னிடவரைக் காணில்நாணும்,
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா,
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்.
4

 

621 ஆர்க்குமென் நோயி தறியலாகா
தம்மனை மீர்.துழ திப்படாதே,
கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
கைகண்ட யோகம் தடவத்தீரும்,
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்
காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து,
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்.
5

 

622 கார்த்தண் முகிலும் கருவிளையும்
காயா மலரும் கமலப்பூவும்,
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட்
டிருடீகே சன்பக்கல் போகேயென்று,
வேர்த்துப் பசித்து வயிறசைந்து
வேண்டடி சிலுண்ணும் போது,ஈதென்று
பார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும்
பத்தவி லோசநத் துய்த்திடுமின்.
6

 

623 வண்ணம் திரிவும் மனங்குழைவும்
மானமி லாமையும் வாய்வெளுப்பும்,
உண்ண லுறாமையு முள்மெலிவும்
ஓதநீர் வண்ணனென் பானொருவன்,
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு
சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்.
7

 

624 கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்,
பற்றி யுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள். உங்களுக் கேச்சுக்கொலோ,
கற்றன பேசி வசையுணாதே
காலிக ளுய்ய மழைதடுத்து,
கொற்றக் குடையாக வேந்திநின்ற
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்.
8

 

625 கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்.
9

 

626 மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னளவும்,
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை,
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.
 10