பெரியாழ்வார் அருளிச்செய்த
நான்காம் பத்து – நாவகாரியம்
(முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும்,
அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)
| 360 | நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார் தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர் மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத அப் பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. |
1 |
| 361 | குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய் செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர் பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே. |
2 |
| 362 | வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும் திண்ணைசூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன்திருநாமங்கள் எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய் உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே. |
3 |
| 363 | உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள் நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர் நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர் பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ. |
4 |
| 364 | ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய் தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர் நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே. |
5 |
| 365 | பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால் ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே. |
6 |
| 366 | குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர் கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள் இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ. |
7 |
| 367 | நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும் தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர் குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள் விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே. |
8 |
| 368 | கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர் செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால் எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே. |
9 |
| 369 | காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் கேசவா. புருடோ த்தமா. கிளர்சோதியாய். குறளா. என்று பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே. |
10 |
| 370 | சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும் கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல் ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. |
11 |

