பெரியாழ்வார் அருளிச்செய்த
நான்காம் பத்து –மூன்றாம் திருமொழி – உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு)
| 349 | உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. |
1 |
| 350 | கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும் வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. |
2 |
| 351 | மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. |
3 |
| 352 | மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப் பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. |
4 |
| 353 | பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. |
5 |
| 354 | பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம் ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. |
6 |
| 355 | கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள் இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம் இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. |
7 |
| 356 | எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. |
8 |
| 357 | கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. |
9 |
| 358 | ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும் ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. |
10 |
| 359 | மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில் மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. |
11 |

