இரண்டாம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

பெரிய திருமொழி – இரண்டாம் பத்து – இரண்டாம் திருமொழி

1058 காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர்,
நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்,
வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
2.1

 

1059 தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்,
பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள,
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
2.2

 

1060 முன்னோர் தூது வானரத்தின் வாயில்
மொழிந்து,அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள
முனிந்து அவனே பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப்
பெருநிலத்தார்,
இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே.
2.3

 

1061 பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்,
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்,
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்,
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே.
2.4

 

1062 பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல்,
சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன்எண்ணில்,
நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி,
ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே.
2.5

 

1063 சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும்
தேவர்க்கெல்லாம், மூத்த நம்பி முக்கணம்பி யென்று
முனிவர்த்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
2.6

 

1064 திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற,
எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.
2.7

 

1065 முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்,
தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.
2.8

 

1066 பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை
பனிமலராள், வந்தி ருக்கும் மார்வன்நீல
மேனி மணிவண்ணன்,
அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த,
இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
2.9

 

1067 இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை,
வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன்,
கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார்,
அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே.
2.10

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!