ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – இரண்டாம் பத்து – ஒன்றாம் திருமொழி
| 1048 | வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே. இனிதுவந்து, மாதவ மானவர் தங்கள் சிந்தை யமர்ந்துறை கின்றவெந்தை, கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள் ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. |
1.1 |
| 1049 | உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப் பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய், குறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து, அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. |
1.2 |
| 1050 | இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்து வாருற வோடும், வானிடைக் கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய், வண்டு வாழ்வட வேங்கடமலை கோயில் கொண்டத னோடும், மீமிசை அண்ட மாண்டிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. |
1.3 |
| 1051 | பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே. பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை, கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு, வானவர் ஆவி யாயிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. |
1.4 |
| 1052 | பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை, தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய் எங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள், அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. |
1.5 |
| 1053 | துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும், தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய், கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை, அமர நாயகறகு இன்றடிமைத்தொழில் பூண்டாயே. |
1.6 |
| 1054 | தருக்கி னால்சமண் செய்து சோறுதண்தயிரினால்திரளை,மி டற்றிடை நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய், மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும், வானிடை அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. |
1.7 |
| 1055 | சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந் தே,என் னெஞ்சமென் பாய்,.எனக் கொன்று சொல்லாதே, வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய, ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. |
1.8 |
| 1056 | கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்என் நெஞ்சமென் பாய். துணிந்துகேள், பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா, ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து ஆடு கூத்தனுக் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. |
1.9 |
| 1057 | மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில் மேவிய, அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை, கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம் மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. |
1.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

