ஏழாம் திருமொழி


பெரியாழ்வார் அருளிச்செய்த
நான்காம் பத்து – ஏழாம் திருமொழி – தங்கையைமூக்கும்
(தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை)

 

391 தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை
கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே.
1

 

392 சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச் சந்திரன்வெங்கதிர்அஞ்ச
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக் கண்டமென்னும்கடிநகரே.
2

 

393 அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு
எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக் கண்டமென்னும்கடிநகரே.
3

 

394 இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான்
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே.
4

 

395 உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும்
மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு
எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம்
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே.
5

 

396 தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே.
6

 

397 விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு
அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும்
கற்பகமலரும்கலந்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே.
7

 

398 திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய்
அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு
நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே.
8

 

399 வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி
இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை
தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே.
9

 

400 மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே.
10

 

401 பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல்
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று
தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே.
11