மூன்றாம் திருமொழி


பெரியாழ்வார் அருளிச்செய்த
ஐந்தாம் பத்து – மூன்றாம் திருமொழி – துக்கச்சுழலையை
(திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்)

 

453 துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ?
மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில்
சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய்.
1

 

454 வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை
அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய்.
2

 

455 உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன்
தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய்
புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று
இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய்.
3

 

456 காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன்
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன்
தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய்.
4

 

457 காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல்
மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா
மாலுகளாநிற்கும்என்மனனே. உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்
சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய்.
5

 

458 எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும்
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிரத்
திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய்.
6

 

459 அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால்
இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய்
சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும்
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய்.
7

 

460 எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன்
மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்.
சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய்.
8

 

461 அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே?
சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால்
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய்.
9

 

462 சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய்
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன்
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே.
10